Thursday, 22 June 2023

தமிழர் பண்பாட்டு மரபில் பொங்கல்

அலைகுடிகளாக வாழ்ந்த மனிதர்கள் பல பரிமாணங்களைக் கடந்து இனக்குழு வாழ்க்கைக்குத் தங்களை தயார்செய்து கொள்ளும்போது தான் அவர்களின் வாழ்வியல் அனுபவங்களை வழக்காறுகளாக நிகழ்த்தத் தலைப்பட்டார்கள். வேட்டைச் சமூகமாய் இருந்தபோது பெற்ற பொருட்களை சமமாக பாதீடு (பகிர்ந்து இடு என பொருள்படும். இதுபற்றி தமிழ் இலக்கண மரபில் உள்ளது) செய்ததுபோல் தங்களது அனுபவங்களையும் ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொண்டதன் விளைவால் வழக்காறுகள் தோன்றியுள்ளன. ஒவ்வொரு இனக்குழு சமூகமும், உற்பத்தியில் ஈடுபட்டு பொருளீட்ட முற்படும்போது அதன்சார்ந்த சடங்குகள் உருவாயின. ஓர் இனக்குழு சமூகத்தில் உருவான சடங்கு நிலவியல் எல்லை கடந்தும் பரவியது. இவ்வாறு சடங்காய் நிகழ்த்தப்பட்ட வழக்காறே பொங்கல் விழாவாகும். காலப்போக்கில் சடங்கிலிருந்து விலகி நிறுவனப்படுத்தப்பட்டு விழாவாக இன்றளவிலும் தமிழர்கள் கொண்டாடிவருகின்றனர்.

pongal at collegeஎந்தவொரு சமூகம் தொன்மைச் சமூகமாக இருக்கிறதோ, அச்சமூகம் பல்வேறுபட்ட பண்பாட்டு அடையாளங்களைத் தன்னகத்தே கொண்டிருக்கும். பண்பாட்டு அடையாளங்களை வெளிப்படுத்தும் ஊடகமாக வாய்மொழி வழக்காறுகள் முக்கியத்துவம் பெறுகின்றன. வழக்காறுகளுக்கும், உற்பத்தி உறவுகளுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. உற்பத்தியில் ஈடுபடும் போதும், வழக்காறுகளை நிகழ்த்தும்போதும் மகிழ்தல், அறிவூட்டல் எனும் நிலை உருவாகின்றது. உற்பத்தி மூலம் உபரி கிடைப்பது போல் அதன் மூலம் சடங்குகளும், விழாக்களும், நிகழ்த்துக்கலைகளும் கிடைக்கின்றன. அந்த வகையில் தமிழர்களுடைய பொங்கல் விழா உற்பத்தி சார்ந்த கூட்டு வாழ்வினையும், கூட்டு உணர்வினையும், கூட்டுச்செயல்பாட்டினையும் வெளிப்படுத்தும் விதமாய் அமைந்துள்ளது.

‘பழையன கழிதலும், புதிய புகுதலும் கால வகையினானே’ எனும் இலக்கண வரியின் மூலம் பழையனவற்றிலிருந்து புதுமை உருவாவது காலத்தின் சுழற்சி என்பதை அறிய முடிகிறது. பொங்கல் விழாவின் முதல் நாளாக போகிப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. பழைய துணி முதலிய பொருட்களை தீயிட்டு கொளுத்தி விட்டுவிட்டால் நன்மை கிடைக்கும் என்பதற்காக பழைய பொருட்களை இந்நாளில் எரிப்பதுண்டு. இவ்வாறான நிகழ்வில் தான் பழைமையான ஓலைச்சுவடிகளை புனல்வாதம் எனும் பெயரில் எரிக்கப்பட்டதையும் அறிய முடிகிறது.

இதற்கடுத்ததாக காப்புக்கட்டுதல் எனும் நிகழ்வினைச் செய்வதுண்டு. இது நாட்டுப்புற நம்பிக்கை சார்ந்த வளமைச் சடங்காகும். மக்களை நன்கு காக்க வேண்டுமென நாட்டுப்புற தெய்வத்திடம் வேண்டி வீட்டுக்கூரையின் மேல்பகுதியில் மாங்குழை, பாலாங்குழை, கூளப்பூ முதலியவைகளை வைப்பது பாரம்பரிய வழக்கமாக உள்ளது. இது மார்கழி கழிவின் இறுதியாய்ப் கொண்டாடுவதாகும்.

அடுத்ததாக தை முதல் நாளாகும். இதுவே தமிழ் ஆண்டின் முதல் நாள். இது தமிழர்களின் புத்தாண்டின் தொடக்கமாகும். சித்திரை என்பது பார்ப்பனர்கள் வந்தபின்னரே தமிழ் ஆண்டின் முதல் மாதமாக கொண்டாடப்பட்டது. இதுவும், ஆரியமயமாதலின் சூழ்ச்சி என்றே சொல்லலாம். தமிழ் இலக்கண மரபின்படி பார்த்தோமானால் பொழுது சிறுபொழுது, பெரும்பொழுது என்று இரண்டாகப் பகுக்கப்பட்டுள்ளது. இதில் சிறு பொழுது என்பது ஒரு நாளை ஆறுபொழுதுகளாக பிரிப்பதாகும். பெரும்பொழுது என்பது ஒரு ஆண்டினை பன்னிரெண்டு திங்கள்களாகப் பிரிப்பதாகும். இவ்வமைப்பின் அடிப்படையில் பார்த்தோமானால் தை மாதத்தையே முதல் மாதமாக கொள்ள வேண்டும். எனவேதான் ‘தை பிறந்தால் வழிபிறக்கும்” எனும் பழமொழி உருவாகியது. ஒன்றின் தோற்றத்தைத்தான் பிறப்பு என்று கூற முடியும். பிற வேறு எந்த தமிழ் மாதத்தையும் பிறப்பு என்கிற அடைமொழி கொடுத்து கூறுவது மரபன்று. ஆதலால், தை மாதமே தமிழ்ப்புத்தாண்டாகும். இதனை கொண்டாடும் விதமாகவே மாதத்தின் முதல் நாளில் பொங்கல் கொண்டாடப்படுகிறது.

இதற்கடுத்ததாக உழவுத்தொழிலுக்கு நன்றி கூறும் வழிபாட்டு மரபாக ஆடு, மாடுகளைப் பராமரித்தல் எனும் நிலையில் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. ஒருவருக்கொருவர் சந்தித்து உறவுமுறைகளை மேம்படுத்தும் விதமாக காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இது மக்களின் கூட்டு வாழ்க்கை முறையினைமேன்மைப்படுத்துவதாய் அமைந்துள்ளது. ஆடிப்பட்டத்தில் விதைக்கப்பட்ட நெற்கதிர்களை அறுவடை செய்து நிலத்திற்கும், உழவுத்தொழிலுக்கும் வலிமை உருவாக வேண்டும் என்பதற்காக பொங்கல் செய்து கொண்டாடுவது வழிபாட்டு மரபோடு இணைக்கப்பட்டது. நிலத்தில் விளைந்த நெல்லரிசியினைக் கொண்டும், கரும்பு, வெல்லம் முதலியவைகளைப் படைத்து பொங்கலிட்டு வழிபடுவர். பின்னர் பொங்கலினையும், கரும்பினையும் நிலத்திற்குப் படையலிட்டு உழவுத்தொழிலுக்கு உதவிய மாடுகளுக்கு உணவாக உண்ணக் கொடுப்பதுண்டு. தொடக்க காலத்தில் இவ்வழிபாடு மருதநிலத்திலேயே தோன்றியிருக்கும். ஏனென்றால் மருதநிலம் என்பது வயலும் வயல் சார்ந்த பகுதியாகும். இந்நிலத்தில் தான் நெல், கரும்பு முதலிய உணவுப்பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டது. பின்னர் குறிஞ்சி, முல்லை முதலிய நிலங்களிலும் இவை கொண்டாடப்பட்டது. பின்பு இவ்வழிபாடு பரவலாக்கம் பெற்றது என்று கூற முடியும்.

பொங்கல் வைக்கும் தினத்தன்று பொங்கிவரும் பால்நீரை ஆராவாரத்தோடு ‘பொங்கலோ பொங்கல்; பால் பொங்க, பச்சரிசி பொங்க’ என வேளாண் உற்பத்தியையும் சமூக விருத்தியையும், பெருக்குவதற்காகவே பொங்கல் சமைத்தல் நிகழ்த்தி வருவதுண்டு. பொங்கலில் பொங்கிய பால்நீரை எடுத்து வீட்டுக்கூரையில் தெளிப்பதை வழக்கமாக செய்யவதுண்டு. திணைமாறி வந்த ஆந்தையை விரட்டும் விதமாக இச்சடங்கை தொடக்கத்தில் செய்தனர். இதனை பொங்கழி என்றும் பொங்கித் தெளித்தல் சடங்கு என்றும் கூறுவர்.

பொங்கல் உணவுப்பண்டமாக இருப்பினும், உள்ளார்ந்து நோக்கும் போது, பண்பாட்டு இருப்பின் வேரிலிருந்து கிளர்ந்த தமிழரின் உணவுப் பண்பாடாகப் பார்ப்பதற்கு இடமுண்டு. பொங்கல் எனும் சொல் பொங்கு எனும் பகுதிச் சொல்லில் இருந்து கல் எனும் விகுதிச் சொல் இணைந்து பொங்கல் எனும் சொல் உருவாக்கம் பெறுகிறது. இச் சொல் பொங்குதல் எனும் உள்ளீட்டிலிருந்தே உருவாகியுள்ளது. பொங்குதல் எனும் சொல்லிற்கு தமிழ் அகராதி பல அர்த்தங்களைத் தந்துள்ளது. பொங்குதல், கொதித்தல், கொந்தளித்தல், செழித்தல், சமைத்தல், உயருதல், மேலேருதல், வளர்தல், விளம்புதல், விளங்குதல், செறுக்குறுதல், மகிழ்தல். இவ்வாறு பல அர்த்தங்களில் பொங்குதல் எனும் சொல் பயன்பட்டுள்ளன. இதன் பின்னனியில் தமிழ் இலக்கண இலக்கியங்கள் பொங்குதல் எனும் அடிக்கருத்தில் அமைந்த பாடல்களைப் பதிவு செய்துள்ளன.

பொங்கின சிலம்பு / பொங்கி மறத்திடை மான மேற்க்கொண்டு / பொங்குதலின்றி புரையோர் நாட்பண் / பொங்கு நீர் ஞாலம் /வன்கொங்கை பொங்கஃ போர்த்தொழில் வேட்கைபூண்டு பொங்கின/ பொங்குகாலம் /தழைக்கும் / பொங்கழியாலை புகையொடு பரந்துபொங்கல்படி / பொங்கல் இனாம் இவ்வாறு தமிழ் இலக்கண இலக்கியங்களில் அமைந்துள்ளன. பொங்குதல் என்பது உணவை சமைக்கும் போது ஏற்படும் நிலையினைக் குறிக்கும் சொல்லாக மட்டுமில்லாமல் உற்பத்தியோடும், அறிவு வளர்ச்சியோடும், சமூக விருத்தியோடும், வளமைக்கான குறியீடாகவும் ஆராவாரத்திற்காகவும் உயர்வுக்காகவும் என பல நிலைகளில் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது.

தமிழர் வழிபாட்டு மரபில் பொங்கல் விழா பாரம்பரியமிக்க, தொன்மைமிக்க விழாவாகும். இதனை கொண்டாடுவது தமிழரின் பண்பாட்டு அடையாளங்களைப் பேணுவதாகும். இன்றைய சூழலில் பொங்கல் விடுமுறைக்கான நாட்களாவே அணுகப்பட்டு வருகிறது. உள்ளார்ந்து நோக்கும் போது மனிதர்கள் உற்பத்தியிலிருந்து அந்நியமாகி வருகின்றதை இது காட்டுகிறது. விளைநிலங்கள் கான்கிரீட் வீடுகளாகவும், நீண்ட சாலைகளாவும் மாறிய சூழலில் இயற்கை சார்ந்த உற்பத்தி நிலங்கள் காவுவாங்கப்பட்டு வருகின்றன. ஒருபுறம் நவீன கலாச்சாரத்தாலும், உலகமயமாக்கலாலும், நவீன முதலாளித்துவச் சூழல்களாலும் பாரம்பரிய உற்பத்தி சார்ந்த பண்பாட்டு மரபும் தமிழர் வாழ்விய‌லும் அழிக்கப்படுகின்றன. இச்சூழலில் தமிழின் பாரம்பரியத் தொன்மையான பொங்கலை பண்பாட்டின் அடையாளமாகவே கொண்டாடி மகிழ்வோம்.

- ம.கருணாநிதி

நன்றி: கீற்று மின்னிதழ், 

31டிசம்பர் 2018. 

Monday, 16 August 2021

 

கொரோனா பேரிடரில் கலப்பு கற்றல் (BLENDED LEARNING) கொள்கை 

 ம.கருணாநிதி, தமிழ் உதவிப்பேராசிரியர், அருள் ஆனந்தர் தன்னாட்சிக் கல்லூரி, கருமாத்தூர் - 625 514.


கடந்த இரண்டு ஆண்டு காலமாகத் தொடரும் கொரோனா பேரிடர் உயிரிழப்புகளும் வாழ்வாதாரப் பிரச்சினைகளும் உருவாகிய நிலையில் தேசிய கல்விக் கொள்கையினை இந்திய ஒன்றிய அரசு நடைமுறைப்படுத்த பல்வேறு எதிர்ப்பும், நிராகரிப்பும் எழுந்துள்ளது.

கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக நடுத்தர, அடித்தட்டு, கிராமப்புற மக்கள் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். இதைப் போன்று கல்வி கற்கும் மாணவர்களும் பெரும் பாதிப்பிற்குள்ளாகி உள்ளார்கள்.

ஊரடங்கு காரணமாகக் கல்வியில் இணைய வழிக் கற்பித்தல், தேர்வுகள் ரத்து, அனைவரும் தேர்ச்சி முதலான அரசின் அறிவிப்புகள் யாவும் மாணவர்களின் கற்றல் வளர்ச்சியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இச்சூழலில் இணைய வழிக் கற்றல் வழியாகக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு இருபெரும் சுமையைச் சுமக்கிறார்கள். ஒன்று கல்விக் கட்டணம். மற்றொன்று இணையத்திற்கான கட்டணம். இவை இரண்டுமே மாணவர்களின் பெற்றோர்களுக்கு ஊரடங்கு காலத்தில் பெரும் சுமையேயாகும்.

இணையவழிக் கற்றலை விரிவுபடுத்த நினைத்ததும், இதன் மூலமாக மிகப்பெரிய அளவில் லாபம் இருப்பதை அறிந்த தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் மேலும் லாபத்தைப் பன்மடங்காகப் பெருக்குவதற்குக் கலப்பு கல்வி முறையைக் கொண்டு வர, பல்கலைக்கழக மானியக் குழு (UGC) நினைக்கின்றது.

அண்மையில் பல்கலைக்கழக மானியக் குழுச் செயலாளர் அனைத்துப் பல்கலைக் கழகங்களுக்கும் கல்லூரிகளுக்கும் புதிய வழிமுறை வழிக் கற்பித்தலுக்கான அறிவிப்பையும், பரிந்துரையையும் விடுத்துள்ளார்.

கலப்பு கற்றல் முறை என்பது புதிய கற்றல் முறையாகவும், மாணவர்களின் திறன் மேம்பாடு, மாணவர்களின் சுதந்திரம் சார்ந்தாக இருப்பதாகவும் கலப்பு கற்றல் குறிப்பேடு குறிப்பிடுகிறது.

இந்தக் கலப்பு கற்றலில் நாற்பது விழுக்காடு இணையவழிக் கற்றல் கற்பித்தல் சார்ந்ததாகவும், மீதமுள்ள அறுபது விழுக்காடு ஆசிரியருக்கும் மாணவருக்குமான நேருக்கு நேர் கற்பித்தல் சார்ந்ததாகவும் அமைய இருப்பதாக கலப்பு கற்றல் கற்பித்தலின் அணுகு முறை வரையறுக்கப்பட்டுள்ளது.

இந்தக் கற்றல் முறை மாணவர்களின் கற்றல் வளர்ச்சியை உள்ளடக்கிய தொடர் செயல்பாட்டைப் பின்னுக்குத் தள்ளக் கூடியதாகும். கொரோனா பெருந்தொற்றுக் காலத்தைப் பயன்படுத்தி தேசிய புதிய கல்விக் கொள்கையின் ஒரு பகுதியான டிஜிட்டல் வழி கற்றல் கற்பித்தலைப் பரவலாக்கம் செய்ய யுஜிசி நினைக்கின்றது.கலப்பு கற்றல், மெய் நிகர் கற்பித்தல் என்பதான டிஜிட்டல் கற்றல் முறை வழியாக, கல்வி நிலைய வகுப்பறையை ஒழித்து கூகுள் வகுப்பறையை உருவாக்க நினைக்கின்றது.

இந்திய ஒன்றியத்திலுள்ள அனைத்து நாட்டு மக்கள்களுக்குப் பொருளாதார சமத்துவம் உருவாக்காமல் டிஜிட்டல் இந்தியா எனும் கற்பனையுலகை உருவாக்க முற்படுவது போலித்தனத்தைக் காட்டுகிறது.

வாழ்விடம், பொருளாதாரம், கல்வி, மருத்துவம் எனத் தன்னிறைவு அடையாத இந்திய நாட்டில் பெரு நிறுவன லாபத்தை மட்டுமே கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டு வரும் அனைத்துத் திட்டங்களும் மக்கள் விரோதத் திட்டங்களாகவே இருக்கின்றன.

கல்வி, மருத்துவம் இவையாவும் இலவசமாகக் கிடைக்க வேண்டிய நிலையை உருவாக்காமல் சிறு, பெரு முதலாளிகளின் வளர்ச்சி சார்ந்து செயல்படுவதே டிஜிட்டல் இந்தியாவின் திட்டம். இந்நிலையில் கலப்பு கற்றல் முறை எனும் புதிய கல்விமுறையை உயர் கல்வியில் கொண்டு வர நினைப்பது கார்ப்பரேட் மயமாகும், கல்விக்கான வெள்ளோட்டமாகும்.இதை மனிதவள மேம்பாட்டுத் துறையும், பல்கலைக்கழக மானியக்குழுவும் உணர வேண்டும். கல்வி மேம்பாட்டைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட இவ்வமைப்புகள், கொரொனா காலத்திலும் அதற்குப் பிறகும் ஒன்றிய அரசின் கைப்பாவையாகச் செயல்படாமல்,மாணவ சமுதாயத்தின் மேல் அக்கறையோடு செயல்படவேண்டும்.

மாணவர்களின் அறிவு வளர்ச்சியை ஏற்படுத்தும் வகுப்பறையைப் புறந்தள்ளி விட்டு தொழில்நுட்பத்தைக் கையாள்வதில் மட்டும் அறிவு வளர்ந்து விடாது என்பதை உணர வேண்டும்.

கல்வி பயிலும் மாணவர்களுக்குக் கற்றலுக்குத் தேவையான தொழில்நுட்பக் கருவிகளை இலவசமாக வழங்கிய பின்னர் கலப்பு கற்றலை உருவாக்க வேண்டுமே ஒழிய பெரு நிறுவன லாபத்தினை உள்ளீடாகக் கொண்டு உருவாக்கக் கூடாது.

குலக் கல்வியின் மறுவடிவமாக உருவாக்கப்பட்ட தேசிய கல்விக் கொள்கையில் நிராகரிக்கப்பட வேண்டியவை ஏராளம் இருக்க, அதன் ஒரு பகுதியாகச் சொல்லப்படும் கலப்பு கற்றல் முறையைக் கொரோனா பொது முடக்கத்தைச் சாதகமாகப் பயன்படுத்திக் கலப்பு கற்றலை கொண்டு வருவதற்கு எதிராக, கல்வியாளர்கள் எதிர்நிலைப்பாட்டினை உருவாக்க வேண்டும்.பிற்காலத்தில் பள்ளிகள், கல்லூரிகளில் இணையக் கற்றலை முழுமையாக்கப்படுமானால் ஆசிரியர்களின் அறப்பணி ஒழிக்கப்படும் நிலை உருவாகும்.

நமக்கு நாமே கற்றல் எனும் நிலை உருவாகினால் பின்னர் ஆசிரியர்கள் எதற்கு? கல்வி நிறுவனங்கள் எதற்கு? எனும் பிற்போக்குத்தனமான தரகு முதலாளிகளின் கேள்விகள் அபாயச் சூழலை உருவாகக் கூடும்.

ஒவ்வொரு மாணவக் குழுக்களும் தமக்கான கற்றல் பயிற்றுநரை தாமே நியமித்துக் கொண்டு தமது வீட்டிலே ஒரு கூகுள் வகுப்பறையை உருவாக்கிக் கொண்டு, கல்வி கற்கும் நிலைக்குத் தள்ளப்படுவதே உருவாகும். இளைய தலைமுறை மாணவர்களின் அறிவு சார்ந்த சமூகமே நாளை பொதுமைச் சமூகத்திற்கானதாகும்.

வெறுமனே மாணவர்களை ஒரு வங்கியின் உறுப்பினர் போன்றும் முதலீட்டாளர் போன்றும் பங்குதாரர் போன்றும் நினைக்கும் கலப்பு கற்றல் மிக மோசமான விளைவுகளை உருவாக்கும்.

கலப்பு கற்றல் முறையில் ஏபிசி (அகடமிக் பேங்க் ஆப் கிரடிட்) எனக் கூறுவது மாணவர்களின் கற்றலை ஒரு வங்கியில் பணத்தைச் செலுத்துவது, வட்டி விகிதத்தை கருத்தில் கொள்வது எனும் வங்கிச் செயல்பாட்டோடுப் பொருத்திப் பார்ப்பது பிற்போக்குத்தனமானதாகும்.

இதனால்தான் மாற்றுக் கல்வியின் தேவையை உணர்ந்த அறிஞர் பாவ்லோ, கற்றல் செயல்பாட்டை வங்கிச் செயல்பாட்டோடு ஒப்பிடுவது மிக மோசமானது என்று கூறியுள்ளார்.

கலப்பு கற்றல் முறையின் பின்விளைவுகள்

• சமூகநீதிக்கு எதிராக வடிவமைக்கப்பட்ட புதிய தேசிய கல்விக் கொள்கையை உள்ளடக்கியுள்ளது.

• கலப்பு கற்றல் மாணவர்களைப் பங்குதாரர் போன்றும் முதலீட்டாளார் போன்றும் நினைக்கின்றது.• கூகுள் வகுப்பறை வழியாகப் புதிய கொள்கையாக நேருக்கு நேர் கற்றல், ஆன்லைன் கற்றல், தொலைதூரக் கல்வி, மெய்நிகர் பயன்முறை உள்ளிட்ட பல கற்றல் முறைகளை ஏற்றுக்கொள்ளப் பரிந்துரைக்கிறது.

• கலப்பு கற்றல் கற்பித்தலில் கவனம் செலுத்துவதன் மூலம் தொழிற்கல்வி படிப்புகள், பட்டப் படிப்புகள், பட்ட மேற்படிப்புகளில் கார்ப்பரேட்களின் லாத்திற்கான பல மாதிரி அணுகுமுறைகளைப் பயன்படுத்துவதையும் இது ஊக்குவிக்கிறது.

• மாணவர்களின் கல்வி கற்றல் விழுக்காடு குறைவதற்கும், கல்வி கற்றலில் மாணவர்கள் முழு ஈடுபாடு குறைந்து இடைநிற்றல் உருவாகும்.

• நாற்பது விழுக்காடு இணைய வழக் கற்றலை உருவாக்குவதால் ஆசிரியா் பணிக்குறைப்பு ஏற்படும்.

• நெகிழ்வுத் தன்மையைக் கொண்ட கல்வி கற்றலை இணைத்தல், தெலைதூரக் கல்வியை உருவாக்கல், ஆன்லைன் மற்றும் மெய்நிகர் தரவுகள், டிஜிட்டல் கல்விக்கு முக்கியத்துவமளிக்கிறது.

• மாணவர்கள் பட்டப் படிப்பை டிப்ளோமா படிப்பாக தாராள மயமாக மாற்றிக் கொள்ளலாம் என்று உரைக்கின்றது.

• தொழிற்கல்விப் படிப்பை தொழில் மய நிறுவனத்திற்கு மாற்றிக் கொள்ள கலப்பு கல்வி வழிவகுக்கிறது.• பள்ளி, கல்லூரிகளில் கட்டிடங்கள், நவீன வகுப்பறைகள் இல்லாத சூழலில் டிஜிட்டல் தொழில்நுட்பங்களின் வழிக்கற்றல் மற்றும் பள்ளியிலிருந்து உயர்கல்வி வரை அனைத்து மட்டங்களிலும் கற்றல் கற்பித்தலுக்கான தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தின் அடிப்படையில், கலப்புகற்றல் மாதிரிகளைப் பயன்படுத்த புதிய தேசிய கல்விக் கொள்கை (NEP2020) பரிந்துரைக்கிறது.

• கலப்பு கற்றல் கற்றலின் ஒரு பகுதியாக OER(Open educational resources), MOOC (Massive open online courses), Swayam முதலான இணையவழிக் கற்றலை முதன்மைப் படுத்துகிறது.

• மாணவர்களுக்கான வினாடி வினா, மாணவர்களின் ஒப்படைவு, வகுப்புத் தேர்வு, அகமதிப்பீட்டுத் தேர்வு மற்றும் ஏனைய தேர்வுகளை இணைய வழியாக கூகுள் வகுப்பறை வழியாக நடத்தப் பரிந்துரை செய்கிறது.

• பாடத்திட்டத்தில் புலமைத்துவ நிறைந்த பாட ஆசிரியர் ஒவ்வொரு முறையும் கற்பிக்கும்போது கற்றல் திறன் மாறுபடக் கூடியதாகும். ஆனால் மின் பாடப் பதிவுகள் மாறுபாடற்ற நிலைத்த தன்மையைக் கொண்ட மின் கற்றலுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றது.

• கலப்பு கற்றல் மெய்நிகர் ஆய்வகத்தின் வழிக் கற்றலை உருவாக்குகிறது.

• தேசிய தொழில்நுட்பக் கற்றல் திட்டத்தின் (NPTEL - National Programme on Technology Enhanced Learning) வழியாகத் தயாரிக்கப் பட்டப் பாடங்களைக் கலப்பு கற்றலுக்குப் பரிந்துரைப்பது மொழி வாரியான மாநில அரசுகளின் சுயாட்சிக்கான கல்விச் செயல்பாட்டை மறைமுகமாக மறுதலிக்கின்றது.

• கல்வி என்பது மாநில சுயாட்சி சார்ந்ததாக இருக்க வேண்டுமே ஒழிய இந்திய ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் வைக்க நினைப்பது மாநில உரிமையைப் பறிப்பதாகும். கலப்பு கற்றலில் இவ்வாறான சிக்கல்களை சரி செய்து புதிய கல்விக் கொள்கையை அந்தந்த மாநில அரசின் சுய முடிவெடுத்தலுக்கு வழிவகை செய்ய வேண்டும்.

பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு கலப்பு கற்றலை செயல்படுத்துவதற்குத் தடையற்ற இணைய நிகர இணைப்பு வசதி, வன் பொருள், மென் பொருள், ஸ்மார்ட் வகுப்பறைகள், மாணவர்கள் அனைவருக்கும் மடிக்கணினி முதலான கற்றலுக்குத் தேவையான உள் கட்டமைப்புகள் அமைய வேண்டும்.

இதற்குப் பின்னரே கலப்பு கற்றல், கற்பித்தலை சீராக செயல் முறைப்படுத்த முடியும். கலப்பு கற்றல் இணையவழிக் கற்றலை உள்ளடக்கியிருப்பதால் ஜியோ, ஏர்டெல் போன்ற தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்குக் கொள்ளை லாபம் ஈட்டித் தரக் கூடியதாகும்.

இதைக் கருத்தில் கொண்டே ஒன்றிய அரசு 4ஜி அலைக்கற்றை ஒதிக்கீட்டை அரசுத் தொலைத் தொடர்பு நிறுவனத்திற்கு ஒதுக்காமல் தனியார் பெரு நிறுவனங்களுக்கு ஏலமிட்டு விற்பனை செய்துள்ளது.

இணைய வழிக் கல்வியை 100 விழுக்காடு விரிவாக்கம் செய்யப்பட்டால் 5ஜி அலைக்கற்றை ஒதிக்கீட்டைத் தனியார் தகவல் தொடர்பு நிறுவனங்களுக்குத் தாரைவார்க்கப்படுவது உருவாகும்.

நாற்பது விழுக்காடு டிஜிட்டல் கற்றல் என்று கூறி, இனி வரும் காலத்தில் நூறு விழுக்காடு நடைமுறைப் படுத்தப்படும். ஆதலால், கொரோனா பேரிடர் காலத்தைப் பயன்படுத்தி இணையவழிக் கற்றலை மையப்படுத்தும் கலப்பு கற்றல் கொள்கையை நிராகரிக்க வேண்டிய தேவையுள்ளது.

- நன்றி : கீற்று - 08.06.2021


Thursday, 30 July 2020

புனித இஞ்ஞாசியாரின் ஆன்மீகத்தேடல்

முடிவில்லா வாழ்வின் தேடலில்
பலன் அறியா எதிர்நோக்கலில்
ஓய்வு என்பதே நினைவில் கொள்ளாமல்
இன்பமாய் இறைப்பணி ஏற்றுக்கொண்டவரே.
பாம்லூனாவில் புறப்பட்ட
ஆன்மீகப்பயணம்
பல்வேறு நாடுகளுக்குள் சென்றது.
பாம்லூனா கோட்டையில்
குண்டடி பட்டு காயத்தோடும் வலியோடும்
வாழ்வின் அர்த்தத்தை உணர்ந்தவரே.
புனிதர்களின் வாழ்வையும்
இயேசு சரிதத்தையும்
வாசித்தாய்
சுவாசித்தாய்-நீர்
இறையருள் வரம் பெற்றாய்.
இறைவாழ்வே வாழ்வின் ஆணிவேர்
ஆன்மீக வாழ்வே ஊற்றுக்கண்
ஞானத்தின் திறவுகோல் என்பதை
ஞாலத்திற்கு உணர்த்திய இனிகோவே.
நீ பார்க்கும் கிழக்கு
ஆன்மீக கீதத்தின்
விடியலை பாடிச்செல்லும்.
நீரே துறவறத்திற்கு
ஆதியும் அந்தமுமாய் விளங்கினாய்.

உம் வீட்டை விட்டுப்புறப்பட்டு
மோன்செராத்தில்
அன்னை மரியா ஆலயத்தில்
உம் போர்வாளை அர்பணித்தாய்
பட்டாடையை பரதேசியான ஏழைக்கு ஈந்தாய்
நீயோ ஏழ்மையின் திருவுருவாய்
சனலாடையை உடுத்திக்கொண்டாய்.
மோன்செராத் குகையில்
ஆன்மீகப் பயிற்சி பெற்றாய்.-இது
ஒரு மாதத் தவக்காலமாக தொடங்கி
பத்து மாதமாக நீட்சி பெற்றது.
படைப்பின் ஊற்றாகவும்
மூவர் இறைவனே மூலகாரணமாக இருப்பதை-நீர்
அறிந்தாய்.

கார்டோனா நதிக்கரையில்
இறைக்காட்சியானது
படிமமாய்க்-உன்
கண்களுக்குப் புலப்பட்டன.
ஞானத்தின் முதல் படியாய்
பாவப் பிறப்பினை
வேரறுக்க நினைத்தாய்
இதுவே
இறையுறவை முறிக்கும் என்பதற்காக
கேடு செய்யும் பற்றினை விடுபட
உள்மன விடுதலை பெற
சிறகுகள் விரித்துப்பறந்தாய்
எல்லையில்லாப் பிரபஞ்சத்தில்.

மீட்பின் சாட்சியாய்
அருள்பணியில் தெளிந்த நீரோடையாய்
ஆன்மீக வாழ்வின் புத்தொளி எழுச்சியாய்
இயேசு சபையின் கொள்கைக் களஞ்சியமாய்
இறைவாழ்வின் மெய்யன்பாய்
இணையற்ற இறைப்பணிக்காய்
இமைக்கின்ற கணப்பொழுதும்-நீர்
உழைத்தாய்.-நீர் வாழ்க.