ஆளுமை என்பது மனிதர்களின் உளவியல் சார்ந்த செயல்பாடுகளின் அடையாளங்களை தன்னகத்தைக் கொண்டதாகும். மேலும், சிந்தனைகளின் செயல்பாட்டினையும் கொண்டு விளங்குகின்றது. ஆளுமை எனும் தமிழ்ச் சொல்லிற்கு ஆங்கிலத்தில் 'Personality' என்று வழங்கிவருகின்றது. இச்சொல்லிற்கான வேர், இலத்தின் சொல்லான ‘Person’ எனும் சொல்லிருந்து ‘Personality' எனும் சொல் உருவாக்கப்பட்டுள்ளது.
ஆளுமைக்கான விளக்கத்தினை பல்வேறு உளவியல் அறிஞர்கள் தமது கருத்துகளை, சிந்தனைகளை உருவாக்கியுள்ளார்கள். உட்வேர்த் எனும் உளவியல் அறிஞர் ஆளுமை பற்றி பின்வருமாறு கூறுகிறார், “ஒருவருடைய அனைத்து நடவடிக்கைகளின் தரம்”. ஏன்கிற கருத்தின் மூலம் ஆளுமை என்பது ஒருவரின் அவருக்கே உரிய நடத்தை, சிந்தனை, அவரது அகம் - புறம் சார்ந்த நடவடிக்கை மற்றும் நன்னடத்தை முறையே ஆளுமையாகும் என்பதை அறியமுடிகிறது. ஆளுமை கொண்ட நபர்கள், வரலாற்றில் தடம் பதிப்பவர்களாகவும், எல்லோராலும் அறிந்தவர்களாகவும், Popular Personality ஆகவும் விளங்குவார்கள். பகுத்தறிவு கொண்ட மனிதர்கள் அனைவரும் வெவ்வேறு துறைகளில் தனித்தொரு ஆளுமையாக உருவாக முயற்சி செய்து கொண்டிருப்பார்கள். இந்த முயற்சி தொடர் செயல்பாடாய் இருக்கும் போது தான் ஆளுமை உள்ளவர்களாக விளங்க முடியும். ஆளுமையை பின்வறுமாறு வகைப்படுத்தலாம்.
1. ஆளுமை நன்னடத்தையின் கூட்டமைப்பு
2. ஆளுமை மாற்றம் பெறக்கூடியது: உயரக்கூடியது
3. சமூக மதிப்பு சார்ந்தது
4. சமூக நடத்தை சார்ந்தது
5. ஒழுக்கம் - தன்னம்பிக்கை சார்ந்தது
ஆளுமை உள்ளவர்கள் சமுதாய செயல்பாடுகளிலும், நாட்டு நடப்பில் சமூக அக்கறையுடனும், சமூக உணர்வுடனும் இருப்பவர், எதைச் செய்தாலும் ஆக்கப்பூர்வமாகவும், அறிவுப்பூர்வமாகவும் செயல்படக் கூடியவர் ஆவார். எல்லா செயல்பாடுகளும் நேர்மையானதாகவும் உண்மையானதாகவும் வெற்றி உடையதாகவும் இருக்கும். ஏன்? எப்படி? என்று கேள்வி எழுப்பி பகுத்தறிவோடு செயல்படக்கூடியவர்;, மெய்ப் பொருளில் அணுகக்கூடியவர் வாழ்க்கையில் துவண்டு போகாமல் எதிர் நீச்சல் போட்டு எதிர் வரும் சவால்களை சாதனையாக்குபவர் தான் ஆளுமை உடையவர்கனாவார்கள். ஒருவர் எப்படி உள்ளார் என்று இல்லாமல் அவர் மற்றவர்களுக்கு எப்படி காணப்படுகிறார். இதுவே ஆளுமைக்கான விளக்கமாகக் கொள்ளலாம். எப்படியெல்லாம் வாழலாம் என்று இல்லாமல் இப்படித்தான் வாழவேண்டும் என்று லட்சியதோடு வாழும்போதுதான் ஆளுமை கொண்டவர்களாகவும் பலதுறைகளில் சாதனை படைப்பவர்களாகத் திகழமுடியும்.








