Friday, 20 July 2018

மாயக் கோமாளிகளின் ஜாலக்கண்ணாடி நாடக விமர்சனம்

மாயக் கோமாளிகளின் ஜாலக்கண்ணாடி:
நிகழ்வெளியில் சிறகுகள் முளைத்துப் பறக்கும் கோமாளிகள்.
                                - கருநாநிதி
                             
               ச.முருகபூபதியின் மணல்  மகுடி நாடக நிலக் குழுவினர்களால் மாயக்கோமாளிகளின் ஜாலக்கண்ணாடி எனும் நாடகம்  அருள் ஆனந்தர் கல்லூரி, திருப்பத்தூர் தூயஇருதயர் கல்லூரி,ஊட்டி, தியாக ராசர் கல்லூரி,பெங்களுரு, ச.கோயில்பட்டி எனப் பலஇடங்களில் நிகழ்த்தப்பட்டுள்ளது. இந்நாடக்குழுவின் நிறுவனர் ச. முருகபூபதி இந்நாடகத் தயாரிப்பினை இரண்டாண்டுக்கு மேலாக கீழக்குயல்குடி சமணர்மலை அருளானந்தர் கல்லூரி வளாகம் என பல இடங்களில் நாடகப் பயிற்சியினை எடுத்தும்,குகை, மலை, வயல், மணல் வெளிகளிலும் என தழிழ் நிலங்களில் நிகழ்த்துதல் சார் பண்பாட்டுச்சூழலில் நிகழிடமாகக் கொண்டு நாடகம் தயாரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
        மாயக்கோமாளிகளின் ஜாலக்கண்ணாடி நாடகத்தில் நீரினில் மீன்கள் லாபமாக உலாவுவது போல நாடக நடிகஉடல் பிரவாகமெடுக்கிறது. நிகழ்நிலத்தின் திரைச்சீலைக்குள் உருவெடுக்க, இசைவழியாக உள்நுழையும் நடிக உடல், அசைந்து அசைந்து காற்றைத்தேடி பிசுபிசுத்த உடலோடு சுவாசம் பெற்று காற்றின் தேடலாய் அலைவுறும் தன்மையில் நாடகம் வெளிப்பட்டுள்ளது. வாயிசைக் கருவியை இசைத்தவாறே நடிகர்கள் அரங்கில் உள்வருகிறார்கள். பிரபஞ்சப் பொருளைத் தேடுவது, தொலைந்து போன இருப்பின் மிச்சத்தை நாடக உடலாலும், இசையாலும் சிறகுகள் முளைத்துப்பறக்கும் பறவையாய் உருமாறி மரங்களிலும் கிளைகளிலும் செடிகொடிகளிலும் பரிசம் கொள்கிறார்கள். நிலம், நீர், காற்று எனும் பருப்பொருள்கள் ஒவ்வொன்றாய் பொதுமை வெளிக்குள் இருந்து, விடுபட்டு அறிவுசார் சொத்துடமைக்குள் தன்வயப்படுத்தபடுவதை நாடகம் கட்டழிக்கிறது.
         உலகக்கோமாளிகளை ஒன்றிணைத்து நவீனத்தன்மையில் கண்ணாடியில் வெளிப்படும் பிம்பங்களாய் வெளிப்படுத்தியுள்ளார். முருகபூபதி பாரம்பரிய அரங்கில் வியாபித்திருக்கும் கட்டியங்காரரின் தொடர்ச்சியாய் இந்நாடகத்தில் முருகேசனின் நடிப்பு வெளிப்பட்டுள்ளது. மதுரைவீரன் கூத்தின் கட்டியங்காரரை என் நினைவுக்குள் கொண்டுவந்தது. தன் வாழ்வில் குறிசொல்லும் சொற்களைப் போல் இவரின்பாவனைஅமைந்திருந்தது.இந்நாடகத்தின் ஊடிழைப் பிரதியாய் பல அடுக்குகளாக அடுக்கப்பட்டிருப்பினும் முருகேசனின் நடிப்பு, அவரின் வரவு நாடக அமைப்புமுறையில் பரிசோதனையைக் கையாண்டிருப்பதைக் காணமுடிந்தது. நையாண்டித்தனமான கூத்திலுள்ள கட்டடியகாரனின் உரையாடல்போல் அமைந்திருந்தது ‘தலைவரிடம் பணம் இருக்கு ஆனால் அதை எண்ண முடியாது. பணம் இருக்கு ஆனால் என்னிடம் இல்லை’ என்கிற உரையாடல் இருமை எதிர்வில் அமைந்துள்ளது. பணம் மதிப்புச் சமூக உருவாக்கத்தில் நாடகநடிகரின் நிலை அங்கதத்திற்குரியதாக இருப்பதைப் பார்க்கமுடிகிறது. இக்காட்சி வெளிப்பாடு பார்வையாளர்களுக்கு புரிதலை இட்டுச் சென்றது. நீண்டநேரம் நாடகம் பார்க்கின்றோம் என்கிற பார்வையாளர்களின் மன உணர்வு இறுக்கமாக இருப்பது மாற்றப்பட்டு, பார்வையாளர்களும் நாடக உரையாடலில் பங்கு பெறும் அளவிற்கு முருகேசனின் நடிப்பு அமைந்தது.
         நாடக அமைப்புநிலை சார்ந்து அணுகும்போது இந்நாடகம் பரிசோதனை முயற்சியால் பல்வேறு பிரதிகளையும் கதை சொல்லல் முறையும் புதுமையைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். நாடகம் கட்டுடைத்தல், மீட்டுருவாக்கம், விளிம்பினை அணுகுதல், அடையாளங்களை மீளமைக்கப்படுதல் எனும் தன்மையினைக் கொண்டதாக அமைந்துள்ளது.
     கட்டுடைத்தல்: இயந்திரமயமான தொழில்நுட்ப பெருக்கத்தைக் கட்டுடைப்பு       செய்துள்ளது. பன்னாட்டுத் தொழில் மையத்தின் தலைமை பாவைக்கூத்து போல இயக்கப்படுத்துவதைக் கட்டுடைக்கின்றது.
    மீட்டுருவாக்கம்:மலைக்குறத்தியினை அடையாளப்படுத்துதல்
    மீளமைத்தல்:பாரம்பரியக் கோமாளியின் கூத்து வாழ்வின் தன்மையிலிருந்து நவீன கோமாளியின் வாழ்வினை மீளமைத்தல்.சடங்குச்சூழலை அரங்கத்தோடு பொருத்துதல்.
        இந்நாடக நடிகர்கள் மலைக்குறத்தின் சுவடுகளைத் தேடிச் செல்கிறார்கள். குறத்திகளின் மேல் காதல் கொண்ட கோமாளிகள் தன்னுணர்வின் வெளிப்பாடுகளை அரங்கில் வெளிப்படுத்துகிறார்கள். பூமியில் உள்ள ஒவ்வொரு மரங்களும் குறத்திமேல் கொண்ட காதலின் சுவாசத்தைப்பாடுகின்றன என கோமாளிகள் உரையாட குறத்தியர் மூடப்பட்ட தளங்களில் அடிவானத்தை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறாள் என்கிற உரையாடல் குறத்தி இப்பிரபஞ்சம் முழுக்க கற்பகவிருட்சமாய் வளர்கிறாள் என்பதைக் காட்டுகிறது.
      குறத்திப் பெண் மலையும் மலைச்சார்ந்த நிலத்தில் பிறந்த நிகழ்த்துப்பெண். குறிஞ்சி நிலத்தின் தலைவியின் காதலை அகவன் மகளாய் நின்று தலைவியின் வீட்டார் அறியும் வண்ணம் நன்னெடுங்குன்றத்தின் தலைவனைப் பற்றி குறத்தி பாடுவதாக தமிழ் இலக்கியங்கள் காட்டுகின்றன. தமிழ்த் தொன்மத்தை மீட்டெடுப்பதை இந்நாடகம் செய்துள்ளது. இந்த மீட்டெடுத்தல் நிகழ்த்துதலாய் உருவாக்கியது சிறப்பிற்குரியதாகும். ‘பெண் எதிர் பேசாதிருத்தல் பெண்ணிற்கு அழகு’ என்றிருந்த அதிகார வரம்பினை சொல்லாடல் மூலம் உடைத்துப் போடும் தன்மையை குறத்தி நிகழ்துதலுக்குள் செய்தியருப்பதை இந்நாடகம் காட்சி வெளியில் கோமாளியின் மனவெளிக்குள் அகமன உரையாடலாய் கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழ் அரங்கமரபில் கோமாளி,குறத்தி எனும் இரு நிகழ்ந்துநர்களும் மிகமுக்கிய ஆளுமைகள். இவ்விரு ஆளுமைகளும் பால் அறியாச்சொல்லாக வெளிப்படக்கூடியவர்கள். கோமாளிக்குள் குறத்தியும், குறத்திக்குள் கோமாளியும் வெளிப்படுவது பூடகமான நிகழ்த்து வாழ்வில் உறைந்திருப்பவை. குறத்தியினை மீட்டெடுக்கும் கோமாளிகள் ஒவ்வொருவரும் குறத்தியாகவே மாறக்கூடியது இந்நாடகத்தில் வெளிப்பட்டுள்ளது. ஆண்-பெண் எனும் பால்கடந்த உடல்மொழியை மாயக்கோமாளிகளின் ஜாலக்கண்ணாடியில் காணமுடிகிறது. இது புதுமை சார்ந்த தனித்துவத்தைக் காட்டுகிறது.
         மலை சார்ந்த இயற்கைவெளியில் மரங்களையும் பூக்களின் மகரந்தங்களையும் நுகர்ந்து பார்க்கிறாள் குறத்தி. மணம் வீசும் பூக்களால் உயிர் பெற்று காற்றின் சுவாசத்தோடு மலைப்பறவையின் மென்சிறகுகளைத் தானும் பெற்று குறிஞ்சியிலிருந்து முல்லைக்கானகம் நோக்கிவருகிறாள். கற்பின் குறியீடாய் விளங்கும் முல்லைப்பூவின் வாசம்பெறுதல் என்பது தன்னுடலைப் புனிதப்படுத்துதல்-வளமையாக்குதல் எனும் கருத்து நிலையில் பார்க்கமுடிகிறது. முல்லைப்பூவின் தன்னுருவில் குறிஞ்சியின் வெறுமையைப்பாடுகிறாள்.பின் குறத்தி மருத நில வயல்களின் பச்சைமேனியைப்பாடுகிறாள். சிறகுகள் முளைத்தப் பறக்கும் குறத்திப்பெண் நெய்தல் நில உப்புக்காற்றை சுவாசித்துக் கொண்டே விரிந்திருக்கும் உப்புநீரின் மீன்களாய் உருவாகி தன் இசையை மீட்டுகிறாள். வெப்பமின்றி குளிரில் உறைந்திருக்கும் உப்புப்பாறைக்குள் குறத்தி கடல்தேவதையாக,கடல் அன்னையாக படிமமாகிறாள். குறத்திப்பெண் தமிழ் எல்லைவெளியில் ஒற்றை அடையாளத்திற்குள் ஆட்படவைக்காமல் பன்முகம் கொள்ளவைத்துள்ளது மாயக்கோமாளிகளின் ஜாலக்கண்ணாடி. இங்கு தமிழ் நிலப்பரப்பு தாண்டியும் குறத்தியின் குரல் ஒலித்துக்கொண்டிருக்கிறது. இவளுக்கு இணையான கோமாளியின் மொழிதல் குறத்தியின் காதுகளைத் தேடி ஒலிக்க ஏங்குகிறது. மரங்களிலும் செடிகளிலும் வயல் வெளி என இயற்கைப் பெருவெளியில் குறத்தியின் காதுகள் முளைத்திருக்கின்றன. இதனைத் தேடுதல் என்பது இயற்கை சார்ந்து வெளிப்பட்டுள்ளது. மாந்தர்களுக்கும்இயற்கைக்குமான உறவின்தேடலை இந்நாடகம்காட்சிப்படுத்தியுள்ளது. ~புன்னையதுநலனே| எனும் வரிக்குஏற்ப மரங்களின் நேசிப்பை வெளிப்படுத்தும் செவ்வியலிக்கியத் தன்மையினைக் காட்டுகிறது. அதனோடு ஒப்பிடத்தக்கதாக அமைந்துள்ளது..
             நாடகம் சார்ந்த பொருள்கோள் பார்வையாயளர்களை அடிப்படையாகக் கொண்டு அமைகிறது.இது நாடக நெறியாளருக்கும் பார்வையாளருக்கும் பொருந்திப் போவதாகவும் விலகிப்போவதாகவும் இருக்கக்கூடும். நாடகத்தின் முருகியல் உணர்வு முழுக்க பார்வையாளர் சார்ந்ததாக இருக்கிறது.பழக்கப்பட்ட விசயத்திலிருந்தே புரிதல் என்கிற நிலை உருவாகிறது. வாய்மொழி வழக்காற்றுப்பிரதிக்கும் எழுத்துப்பிரதிக்கும் புரிதலில் வேறுபாடு இருக்கின்றது.இங்கு எழுத்தாக்கப்பிரதியே புரிதலில் இருண்மையை உருவாக்குகின்றது. வாய்மொழி வழக்காற்றுப்பிரதி நிகழ்த்துவரோடு தொடர்பாடு அதிகமாக இருப்பதால் புரிதல் சாத்தியமாகிறது.பல்வேறு கோணங்களைக்கொண்ட ஒரு படைப்பு பல்வேறு அணுகுமுறையையும் கொண்டிருக்கிறது.இதில் ஒரு வாசகன் பயணம் கொள்ள படைப்பாளியின் நோக்கிற்கு அப்பாற்பட்டும் உய்த்துணரும் தன்மையைக்கொண்டிருக்கும் போது படைப்பின் சாரத்தை பெறமுடிகிறது.இல்லையெனில் படைப்பிற்கு வெளியில் நின்றுகொண்டு புரியவில்லை என்கிற ஒற்றை வார்த்;தையையே முன்மொழிதலே ஏற்படும்.இது கவிதையானலும்,சிறுகதையாலும்,நாவலானாலும்,நாடகமாலும் பொருந்தும்.இங்குதான் கலை ரசனையோடு எல்லோருக்கும் பொதுவானஅழகுணர்ச்சி சார்ந்த கவித்துவம் இந்நாடகத்தில் வெளிப்படுவதால் பார்வையாளர்களை நாடகத்தோடு ஒன்றவைத்தது.; முருகபூபதியின் நாடகங்களில் இயற்கைக்கும் மனிதனுக்குமான பிணைப்பினை சடங்குகளின் மூலமாக வெளிப்படுவதைக்காணமுடியும். சடங்கு வளமையின் குறியீடாக போலச் செய்வதால் வெளிப்படுகின்றது. இது கூட்டுச்செயல்பாடாக வெளிப்படுகின்றது. குறிப்பாக முளைப்பாரி சடங்கு பெண்கள் தங்களுக்கும் இயற்கைக்குமான தொடர்பாடினை வெளிப்படுத்த இச்சடங்கினை நிகழ்த்துதோடு தானியங்கள் விதைப்பிற்கான ஏதுவான நிலத்தினை உருவாக்க  போலச் செய்வதில் உருவாக்குகிறார்கள். பின்னர் அதையே நிலத்தில் பாடல்களோடு பதியமிட்டதை நவதானியங்களின் விதைப்பு முறையை சடங்கோடு முளைப்பாரி செய்து நிகழ்த்துகிறார்கள். இச்சடங்கு தன்மை  இன்றையசூழலில் தெய்வம்,தலைவர் தொடர்பான சடங்கு முறையாக உருமாற்றம்பெற்றுள்ளது. இந்தத்;;;தொண்மை சார்ந்ததாக  வேளாண்சமூக உற்பத்திமுறையினை  நாடகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. பழங்குடி மக்களை நடத்தையையும் வேளாண்சமூகஉற்பத்தி முறையையும் அதுசார்ந்த தேடலையும் காட்சி வெளியில் கொண்டு வந்துள்ளது சிறப்பிற்குரியது. குறிஞ்சி சார்ந்த தொல் சமூகம் , முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்திணை நிலங்களில் சார்ந்து  சமூகவாழ்க்கை முறையும் கருப்பொருள்களையும் நாடக நடிகர்களின் நடிப்பிலும் நாடகநிலத்திலும் காணமுடிந்தது. மலையும் மலை சார்ந்தகுறிஞ்சிப்புணர்தல் உணர்வும் முல்லைநில இருத்தலும் மருதம் சார்ந்த ஊடல் உணர்வும்  மேளாண்மை சார்ந்த செயலும் பாலை பிரிதல் சார்ந்த உணர் நிலையினை பரந்துபட்டபார்வையை ஆய்ந்துணர்தலாய் நடிப்பின் தொனியும் நாடக மொழியும் அமைந்துள்ளது.
          காட்சி ரீதியான மொழிதலின் தனித்தன்மையைப் புரிந்து கொள்ளுதல் என்பது நவீன அரங்கில் இன்றியமையாமையும்  உடல் இயக்கத்திற்கும் இசைக்கும் முக்கியதுவம் கூத்து மரபில் கொடுக்கப்பட்டிருக்கும.;சலங்கையின் அபிநயத்திற்கு ஏற்ற அடவுகளும் அதற்கேற்ப பின்னரங்கில் இசை இசைக்கப்படும் தன்மையினை கூத்தில் பார்க்கமுடிகிறது. இம்மரபினை தொடர்ச்சியினை மாயக்கோமாளிகள் ஜாலக்கண்ணாடி நாடகத்தில் பார்க்கமுடிகின்றது. முருகபூபதியின் நாடகங்களில் இந்நாடகத்தில் நடிகர்கள் சலங்கைகட்டி ஆடும் அடவுகள் கூத்தின் தொடர்ச்சியாய்அமைந்துள்ளது. சடங்கிற்கும் அரங்கிற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதை முருகபூபதியின் நாடகங்கள் வெளிப்படுத்திவருகின்றன. இது இவரின் தனித்துவத்தைக் காட்டுகின்றது.
           மானுடத்தோற்றுவாயில் இனக்குழு வாழ்க்கை முறையில் தன் செயல்பாட்டுமுறையினை சடங்கின் மூலம் நிறைவேற்றிய மனிதர்கள் நம்பிக்கைப் பாத்திரமாக சடங்கினைப்பார்த்தனர்.வாழ்வின்அடையாளங்களைவெளிக்கொணரபல்வேறுசடங்குகள்செய்யவேண்டியதேவைஏற்பட்டது.இதுமானுடவளமைக்கானதாகவேஅமைந்தது.அந்தவகையில்மாற்றியமைக்கப்பட்ட சடங்கின் ஆக்கங்களையும் பூர்வாங்கத்தன்மையினை உள்ளடக்கியதாகவுமான முருகபூபதியின் நாடக  இயங்கியலை  புரிந்துகொள்ளலாம். கூத்துக்களில் கட்டியங்காரன் எனப்படும் கோமாளி பாத்திரத்தை ஆண்கள் ஏற்று நடிப்பதுண்டு. கூத்தின் நடுப்பகுதியில் இதே கோமாளி பெண் வேடமிட்டு தோழி பாத்திரம் ஏற்பதுமுண்டு. இங்கு ஆண் உடல் பெண் உடலாக பார்வையாளர்களுக்கு காட்சிபடுத்தப்படுகிறது. அப்படி காட்சிபடுத்தப்பட்டாலும் இப்பாத்திரம் ஆண் உடலால் நிகழ்த்தப்படுகிறது என்கிற எண்ணம் பார்வையாளர்களிடம் இருந்தாலும் பெண்பாத்திரமாக நினைப்பார்கள். இங்கு உடல் என்பது நடிப்பினை வெளிப்படுத்தக் கூடியதாக விளங்குகிறது. நடிப்பைப் பொறுத்தவரை மூன்று பால்களுக்கும் பொதுவான அடையாளங்களின் தொகுப்பாக மனித உடல் நாடக நிலத்தில் இயங்குகிறது. அந்தவகையில் கோமாளியின் உடல் ஒற்றை அடையாளத்திற்குள் அடைபட்டு விடாமல் அடையாள விடுதலையை முன்;வைக்கக்கூடிய பறவை உடலாக உருமாறி பூவாக, காயாக, கனியாக, மரமாக என பிரபஞ்ச பருட்பொருள்களின் அடையாளங்களாக உருவாவது மூலமாக சாத்தியப்படும் என்பதை “ஒற்றை ஆளுமைக்குள் சிக்காதவர்களாக” கோமாளியின் புனைவு உடலை அனைத்து ஒடுக்குமுறைக்கான விடுதலையின் சிறகுகள் கோமாளிகளுக்குள் முளைத்து நிகழ்த்து நிலத்தில் மண்புழுதி பறக்க கூத்தில் இருந்து பெற்ற சலங்கையைக் கட்டிக் கொண்டு கூத்தின் அடவுகளை கைவரப்பெற்று பாடிவருகிறார்கள் நவீன கோமாளிகள் கூத்தில் அரங்கேறும் கோமாளிகளுக்குள் வறுமை, பிணி, வலி, காதல், துன்பம், மகிழ்ச்சி, அதிர்ச்சி, ஆச்சர்யம், கோபம் என்பன பல குணநிலைகள் அரிதாரம் பூசப்பட்ட கோமாளியின் உடலுக்குள் மறைந்திருக்கும். இந்த அரிதாரத்தை களைத்து எதார்த்த கோமாளியின் பிம்பங்களை மாயக் கோமாளிகளின் ஜாலக் கண்ணாடியில் வெளிப்படுத்தப்பட்டு உள்ளது.
   தமிழச்;சமூகத்தில் குறத்தி, கோமாளி எனும் பதங்கள் இழிவுக்கான பதங்களாகவே வழங்கி வருகின்றன. இச்சொல்லுருக்களின் அர்த்தத்தினை மாற்றியமைக்கும் வகையில் குறத்தி, கோமாளி இரு நிகழ்த்து ஆளுமைகளை இந்நாடகத்தில் மீட்டெடுக்கப்பட்டுள்ளது. பாசறையில் துயில் கொள்ளும் அரசனை துயில் எழுப்பவது போல நாட்டுப்புறத் திருவிழாவில் சடங்கின் மூலம் கடவுளர்களை வரவழைப்பது போல கோமாளி சடங்காய் தன்னிலையற்ற ஆடுதல் மூலம் குறத்தியை  வரவழைக்க நானிலப் பறவைகளாகவும், மரமாகவும், அலையாகவும் திசைகள் அனைத்தையும் நோக்கி அரிதாரமி;ட்டு கோமாளியின் உடலுக்குள் குறத்தி ஊடுருவ நாடக நடிகர்கள் அழைக்கிறார்கள். நாட்டுபுறத் தெய்வ வழிபாட்டு சடங்கோடு இதனை பொருத்திப் பார்க்க இடமிருக்கின்றது. இந்நாடகத்தில் ஒவ்வொரு நடிகர்களும் குறத்தியின் நிகழ்த்துடலை மீட்டெடுப்பதற்கு சடங்காக நிகழ்த்தப்படும் பாவனை சிறப்பாக அமைந்துள்ளது. இனக்குழு சமூகத்தில் வேட்டைக்குச் செல்வதற்குமுன் சடங்ககாக விலங்கு உடலை தன் உடலுக்குள் வரவழைத்து விலங்கு உடலாக இருக்கும் மனித பாத்திரத்தை மனித உடலாக இருக்கும் பாத்திரம் தன் ஆளுகைக்குள் விலங்கு உடலை கொண்டு வருவதற்கு பாவனை சடங்கினை செய்வதுண்டு. இங்கிருந்து தான் நிகழ்த்துதல் தோற்றம் கொள்கிறது. இதன் தொடர்ச்சியாக கடவுளர்களை மனித உடலுக்குள் கொண்டு வரும் நாட்டுப்புற வழிபாட்டு மரபினை அடிப்படையாக கொண்டு கோமாளி குறத்தி எனும் பாரம்பரிய நிகழ்த்துநரை தங்களின் ஒவ்வொரு உடல்களுக்குள் வரவழைப்பதற்காக இந்நாடகத்தில் கோமாளிகள் சடங்கு சூழலோடு உரக்கப் பாடி குறத்தியையும், கோமாளியையும் அழைக்கிறார்கள். கோமாளியை தன் வசப்படுத்திய நாடக நடிகர்கள் கோமாளி உடலில் குறத்தியை வரவழைக்கிறார்கள். இது பரிசோதனை நாடக முயற்சிகளின் நவீனமாகும்.
      “தன்னிலையற்ற நடிப்பின் பிரபஞ்ச வயல்களிலிருந்து உற்றெடுக்கிறது. திசைகளும்       கோல்களும் அசைகின்றவரையில் மரமாய் நின்று எம் குறத்தியை அரிதாரமிட்டுப் பாடுகின்றோம்.”
        “சோளக்காட்டுக்குள்ள சோடிக்குயில் கூவுதே சோடிக்குயில் பிரிஞ்சவுடன் சோர விட்டேன் கண்ணீராக வருவாளா? என் பச்சக் குறத்தி வருவா. எம் நடிப்பு உடல்மேல் தாவி வருவா.”
        “கண்ணே மலையழகி எங்கொறத்தி கண்மணியே நீ உறங்கு
    நீ வந்தா பூமி தேசம் பொளவடையும் வாய்ப்பந்தல் மறஞ்சுபோகும்”.
             எனும் நாடக உரையாடல்களின் வழியாக நாடக நிலத்தை சடங்கு நிலமாக உருவாக்கி நடிகரின் உடலுக்குள் குறத்தியை வரவழைக்க சடங்காய் நிகழ்த்தப்பட்டதை பாhக்கும் பொழுது தெய்வத்தை தனக்குள் வரவழைக்க ஒவ்வொரு நடிகரும் குழுவாக இருந்து தனித்தனியாக குறத்தியை தனக்குள் வரவழைக்கிறார்கள். இது சடங்கில் இருந்து அரங்காக அவதானிக்கிறது.
             ஒன்று இரண்டாகவும், இரண்டு ஒன்றாகவும் உருவாகும் சித்தாந்தம் போல நாடக நடிகர்கள் கோமாளிகளாகவும், குறத்தியாகவும், குறத்தி கோமாளிகளாகவும், கோமாளிகள் குறத்திகளாகவும் நாடக நிகழ்த்து வெளியில் இயங்குகிறார்கள்.இச்சூழலில் பழமையை தேடுதல் என்பது சமகாலத்தில் எல்லாத் தளங்களிலும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் காலனிய மனோபாவத்தின் எதிர்க்கருத்தியலை நவீன அரங்க மொழிதலில் மாயக் கோமாளிகளின் ஜாலக்கண்ணாடி நாடகம் பிரதிபலித்துள்ளது. காலனிய ஆட்சி காலத்தின் வர்த்தகப்பொருள்களை விற்பதற்கும் பரவல் படுத்துவதற்கும் அரங்கினை கையில் எடுத்து நிகழ்த்தப்பட்டது, ஒரு புறம் இருப்பினும் அதே அரங்க வடிவிலும் காலனியச் செயல்பாடுகளையும், ஆதிக்கத்தையும் எதிர்ப்பதற்கு அரங்கினை பயன்படுத்தியது தமிழ் அரங்க வரலாற்றில் குறிப்பிடதக்கதாகும்.
             அறிவியல் தொழில்நுட்பம் வளர்ந்து வரும் இன்றைய சூழலில் மனிதம் குறித்த பண்புநிலை சூன்யமாகிக்கொண்டிருக்கிறது. முதலாளித்துவ வளர்ச்சிக்கு பின்னால் பாரம்பரிய வாழ்க்கை, விவசாயம்இ உற்பத்தியோடு கூடிய கலைச் செயல்பாடு, வாழ்வாதாரம் அனைத்தும் நீர்த்துப்போகின்ற தருணத்தில் நாம் வாழ்கிறோம். வேளாண் உற்பத்தி சார்ந்த செயல்பாடு இல்லாமல் போகும் பொழுது அங்கு உற்பத்தியோடு தொடர்புடைய கலை உருவாக்கம் அது சார்ந்த ரசனைமுறை இல்லாமல் போகின்றது. முதலாளித்துவ வளர்ச்சிக்காக ஒவ்வொரு சகமனிதரும் வேலை செய்ய வேண்டியுள்ளது. தம்மை அறியாமலும் ஒவ்வொருவரும் தங்களின் உழைப்பின் பயனைச் செலுத்தி வருகின்றோம். பன்னாட்டுத் தொழில் வளர்ச்சிக்காகவும் தங்களை அர்ப்பணிக்கும் மனோபாவத்தில் வாழக்கூடிய சூழ்நிலைக்கு சிறு,பெருநகர,கிராம மக்களின் வாழ்வியல் மாறியுள்ளது. இதனால் பூர்வாங்க,இயல்பான வாழ்க்கைமுறை மாற்றம் பெற்று இயந்திரத்தனமான வாழ்வியலை கொண்டதாக நகரப்பண்பாடு எனும் ஓர்மைக்குள் தள்ளப்பட்டன.                 முதலாளித்துவச்சூழலில் மனிதவாழ்க்கை முறை முற்றிலும் மாற்றம் பெற்றுள்ளது. வாழ்க்கையை வாழ்பவர் ஒருவாராக இருக்க அவ்வாழ்க்கையை ஆட்டி வைப்பவர் வேறு ஒருவராக இருக்கிறார். அந்த வகையில் மாயக்கோமாளிகளின் ஜாலக் கண்ணாடி நாடகத்தில் பொம்மலாட்ட நிகழ்த்து முறையின் தன்மையை உள்வாங்கி, மாற்று வடிவத்தில் நடிகர்களை இயக்கக் கூடியவர் கைகளில் நூல் கயிறுகளால் ஒவ்வொரு நடிகரையும் பிணைக்கப்பட்டு ஒருவர் இயக்க, கயிறுகளால் பிணைக்கப்பட்ட நடிகர்கள் இயக்குபவரின் செயல்களுக்கு கட்டுப்பட்டு பொம்மையை போல ஆட்டுவிக்குப்;படுகிறார்கள். ஒரு கட்டத்தில் கயிறுகளால் பிணைக்கப்பட்டவர்கள் ஒன்றிணைந்து ஆட்டுவிப்பவரை கயிறுகளைக் கொண்டு உடல் முழுக்க சுற்றுகிறார்கள். இக்காட்சி வெளிப்பாடு ஆதிக்கத்தின் மேல் எழுப்பப்படும் கேள்விகளாக வெளிப்பட்டு உள்ளது. கட்டப்படுதல் என்பது இங்கு ஆதிக்கத்தின் வெளிப்பாடாகும.; கட்டினை அவிழ்த்தல் என்பது விடுதலை உணர்வாகும். ஆதிக்கத்தின் மேல் கட்டப்படும் கருத்தியலாக இந்நாடகத்தில் நூல் கயிறுகளை குறியீடாக பயன்படுத்தப்பட்டு உள்ளது.
        பேரினவாத யுத்தத்திற்கு பின்னால் மனித சடலங்களே குவியலாக கிடக்கின்றது. இதில் காணாமல் போனவர்களும், வன்புணர்ச்சிகளுக்கு ஆளானவர்களும், வயோதிகர்களும், கர்ப்பிணிகளும், குழந்தைகளும் சொல்லான துயரத்திற்கு ஆளாகி உள்ளார்கள். தேசிய இன அழித்தொழிப்பில் மிச்சம் இருப்பவர்கள் அன்பிற்காகவும், அரவணைப்பிற்காகவும் ஏங்கும் சூழலை விதி என்று எண்ணுவதா? இத்துயரத்திற்கான மருந்து, கலை ஆக்கத்தின் மூலம் தான் நிகழும் என்கிற உள்ளீடும் “கோமாளி மொழி படிந்த அதிசய பூமி எழுந்து வரட்டும். புதுப் பிரபஞ்சம் பிறக்கட்டும்” என்பதும் யுத்தம் நிறைந்த பூமியின் அழித்தொழிப்பை செய்து வரும் பேரினவாத போக்கை உலகிற்கு எடுத்துச் சொல்லும் நவீன கோமாளியை இங்கு பார்க்க முடிகிறது.
        நாட்டுப்புற வழக்காறுகளில் கதைக்கூறுதல் தொடர்செயல்பாடாய் நிகழ்த்;தக் கூடியதாகும். பாட்டி, தாத்தா, அம்மா என பாரம்பரியமாக நிகழ்த்தி வரும் கற்பனை தழுவிய கதை சொல்லியை இந்நாடகத்தில் புலம்பெயர்ந்து வாழும் மக்களின் வலியினைக்கூறப்பயன் படுத்தப்பட்டுள்ளது. வடகத்தி, தெற்கத்தி கூத்து மரபில் இருக்கும் கலைஞர்களின் வறுமையையும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வேதனையையும் மௌனத்தின் நாவுகளை கோமாளியின் மூலமாக பேச வைத்துள்ளார் நாடக நெறியாளர் முருகபூபதி. கோமாளிகளின் பயணம் அண்ட சராசரம் எங்கும் வியாபித்திருக்கிறது. வேதனை, ஆனந்தத்தையும் இசையினூடாவே சுமந்தபடி பொம்மைகளாக மாறிய கோமாளிகளை பரிசம் கொண்டும், பார்வையாளர்களின் பரிசத்திற்காக சிற்பங்கள் போலவும், ஓவியங்கள் போலவும் இருள் ஒளியில் நிகழ்விடத்தில் பாறைகளில் படிமம் கொண்டு நீண்ட திரைச்சீலைக்கு கோட்டுருக்கள் போலவும் நடிகர்கள் நிகழ் நிலத்தில் நடிப்பை வெளிப்படுத்துகிறார்கள். குறத்தியை தேடுதல் என்பது அரவணைப்பிற்கான ஒன்றாகவும் பழமையை மீட்டெடுத்தல் என்பதாகவும் கோமாளிகள் எல்லாத் திசைகளிலும் இந்நிகழ்த்து பெண்ணை தேடுகிறார்கள.; இவர்களின் தேடலில் நல்லதங்காள் தன் பிள்ளைகளோடு நீரின் தடம் தேடிப்போன தொன்மத்தை கொண்டு வருவதற்காகவும், தீ மூட்டக்கூடிய வார்த்தைகளை கொண்ட ஒற்றை முலையை கொண்ட கண்ணகி தொன்மத்தின் வழி வந்தவர்களாக தமிழ்த்தொன்மங்களை முன்னோக்கி பார்க்க கூடியவர்களாக கடந்து வந்த பாதையின் சுவடுகளை நினைத்து பார்க்க கூடிய நவீன கோமாளியை மாயக் கோமாளிகளின் ஜாலக் கண்ணாடி காட்டுகிறது.
          இந்நாடகத்தின் பல அடுக்குகள் நிறைந்து கதை சொல்லலில் பெண் பாத்திர கதை சொல்லல் தனித்தொரு இடத்தையும் பெற்றள்ளது. கோமாளிகளின் மொழிதலுக்கு இணையாக வேறு ஒரு தளத்தில் இப்பாத்திரம் இயங்குகிறது. கோமாளிகள் குறத்தி பெண்ணை தேடுதல் என்பது இந்நாடகத்தில் பெருவாரியாக இடம் பெற்று இருக்கின்றது. இச்சூழலில் துணிகளால் ஆன பொம்மையை அரவணைத்துக் கொண்டு இழப்பின் உச்சத்தை பாவனையாக தன்உடலில் ஏந்தி அலைவுறும் பெண் பாத்திரம் பார்வையாளர்களின் மனதை கனக்கச்செய்திருக்கும். இப்பாத்திரம் திணைப்புனம் காக்கும் குறத்திப் பெண் போல் தன்னை கவர வரும் பருந்துகளை நான்கு திசைகளில் இருந்தும் விரட்டுகிறாள். இறுதியில் பல்வேறு உருவம் கொண்ட பொம்மைகளோடு வலியின் கீதத்தை பாடி உறைகிறாள்.மரணம் தந்த வலியிலிருந்து விடுபட புதுவுலகை விருப்பும் அமைதி பெண் பயணிப்பு நாடகத்தில் வெளிப்பட்டது.மரணத்தின் வலியினை தாய்மை கொண்ட பெண்ணால் தான் கூடுதலாக  உணரமுடியும் என்பதை பெண்பாத்திரத்தின் மூலம் உணரமுடிந்தது.பொம்மைகளாகிப்போன உயிரற்ற சடலத்தை தன் நெஞ்சோடு அணைத்தவாறு ஒப்புவத்து புலம்புகிறார்.ஒவ்வொரு காட்சிகளும்ஓவியம் போல வெளிப்பட்டாலும் நகர்வுகொண்ட ஓவியம் போல் அமைந்திருந்தன.பிகாசோ ஓவியம் போல் நாடகக்காட்சி வெளி அமைந்து,ஓவியத்தையும் நாடகத்தை ஒப்பிடத்தக்க வகையில் அமைந்துள்ளது புதுச்செல்நெறிக்கானதாக. நுண்கலை நிகழ்த்துக்கலை எனும் இருவேறுதுருவங்களை இணைக்கும் தன்மையில் நாடகம் அமைந்திருக்கின்றது.முருகபூபதியின் நாடகங்கள் பார்வையாளர்களை இருண்மையில் ஆழ்த்துகிறதாக தொடர்ந்து அரங்கியலில் நுண்மான்நுழைபுலம் கொண்டவர்களாலேயே முன்வைக்கப்பட்டுவருகின்றன.ஆனால் முருகபூபதியின் நாடகங்களின் ஒட்டுமொத்த அரங்க ஆக்கங்களின் பயணிப்பிலேயே நாடகப்பொருண்மையை அறியலாம்.
          மாயக்கோமாளிகளின் ஜாலக் கண்ணாடி நாடகத்தில் மாயம் செய்யும் கோமாளிகளின் உரையாடல்கள் அதீத கற்பனை கொண்ட, தன்னுணர்ச்சி சார்ந்த பைத்தியக்காரத்தனமான தன்மைகளில் வெளிப்படுத்தபட்டு உள்ளது. இக்கோமாளியின் உள்ளீடு பாரம்பரிய நிகழ்த்து மரபில் இருந்து எடுக்கப்பட்டு நவீனமாக ஆக்கப்பட்டு உள்ளது. இக்கோமாளியின் உரையாடல் அதிகாரத்தை, ஆதிக்கத்தை கேள்வி எழுப்பக்கூடிய வகையில் எள்ளல் சுவையோடு ஒன்றி விடாமல் பார்வையாளர்களை விலக வைத்து நாடகத்தோடு பயணிக்க வைக்கிறது. அந்த வகையில் மாய கோமாளிகளின் ஜாலக்கண்ணாடி,வளமைசார்ந்த உலகத்தைமீட்டெடுக்க பைத்தியத்திலிருந்து அறிவு பிறக்கும் எனும் சிந்தனையைக்கொண்டு  மாய உலகத்தின் கண்மூடித்தனத்தை மாற்ற கோமாளி அவிழ்த்துக் காட்டும் கண்ணாடியாகக்காகாட்சி அளிக்கிறது.

நன்றி : காவ்யா இதழ்.