Thursday, 30 July 2020

புனித இஞ்ஞாசியாரின் ஆன்மீகத்தேடல்

முடிவில்லா வாழ்வின் தேடலில்
பலன் அறியா எதிர்நோக்கலில்
ஓய்வு என்பதே நினைவில் கொள்ளாமல்
இன்பமாய் இறைப்பணி ஏற்றுக்கொண்டவரே.
பாம்லூனாவில் புறப்பட்ட
ஆன்மீகப்பயணம்
பல்வேறு நாடுகளுக்குள் சென்றது.
பாம்லூனா கோட்டையில்
குண்டடி பட்டு காயத்தோடும் வலியோடும்
வாழ்வின் அர்த்தத்தை உணர்ந்தவரே.
புனிதர்களின் வாழ்வையும்
இயேசு சரிதத்தையும்
வாசித்தாய்
சுவாசித்தாய்-நீர்
இறையருள் வரம் பெற்றாய்.
இறைவாழ்வே வாழ்வின் ஆணிவேர்
ஆன்மீக வாழ்வே ஊற்றுக்கண்
ஞானத்தின் திறவுகோல் என்பதை
ஞாலத்திற்கு உணர்த்திய இனிகோவே.
நீ பார்க்கும் கிழக்கு
ஆன்மீக கீதத்தின்
விடியலை பாடிச்செல்லும்.
நீரே துறவறத்திற்கு
ஆதியும் அந்தமுமாய் விளங்கினாய்.

உம் வீட்டை விட்டுப்புறப்பட்டு
மோன்செராத்தில்
அன்னை மரியா ஆலயத்தில்
உம் போர்வாளை அர்பணித்தாய்
பட்டாடையை பரதேசியான ஏழைக்கு ஈந்தாய்
நீயோ ஏழ்மையின் திருவுருவாய்
சனலாடையை உடுத்திக்கொண்டாய்.
மோன்செராத் குகையில்
ஆன்மீகப் பயிற்சி பெற்றாய்.-இது
ஒரு மாதத் தவக்காலமாக தொடங்கி
பத்து மாதமாக நீட்சி பெற்றது.
படைப்பின் ஊற்றாகவும்
மூவர் இறைவனே மூலகாரணமாக இருப்பதை-நீர்
அறிந்தாய்.

கார்டோனா நதிக்கரையில்
இறைக்காட்சியானது
படிமமாய்க்-உன்
கண்களுக்குப் புலப்பட்டன.
ஞானத்தின் முதல் படியாய்
பாவப் பிறப்பினை
வேரறுக்க நினைத்தாய்
இதுவே
இறையுறவை முறிக்கும் என்பதற்காக
கேடு செய்யும் பற்றினை விடுபட
உள்மன விடுதலை பெற
சிறகுகள் விரித்துப்பறந்தாய்
எல்லையில்லாப் பிரபஞ்சத்தில்.

மீட்பின் சாட்சியாய்
அருள்பணியில் தெளிந்த நீரோடையாய்
ஆன்மீக வாழ்வின் புத்தொளி எழுச்சியாய்
இயேசு சபையின் கொள்கைக் களஞ்சியமாய்
இறைவாழ்வின் மெய்யன்பாய்
இணையற்ற இறைப்பணிக்காய்
இமைக்கின்ற கணப்பொழுதும்-நீர்
உழைத்தாய்.-நீர் வாழ்க.

No comments:

Post a Comment