Friday, 20 July 2018

அறம் திரை விமர்சனம்

அறம் : விளிம்புநிலை மக்களின்         கதையாடல்
    -கருநா நிதி
              
                கோபி நயினார் இயக்கத்தில் மாற்று சினிமாவாகஅறம் வெளிவந்துள்ளது..தமிழ் சினிமாவில் வெகுசனப் பார்வையாளர்களை மாயவுலகத்திற்கும்,நாயகத்தனத்திற்கும் தன்னைத்தியாகம் செய்ய வைப்பதோடு தன்னை இழக்கச்செய்வதுமான பொதுப்புத்தி சார்ந்த இயக்குநர்களிடம் இருந்து மாற்றுப்பாதையை சமூக அக்கறையோடு வெளிப்படுத்தத் துணிந்துள்ளார் கோபி நயினார்.ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களின் வாழ்வியலை நுண்மையாகவும் நுட்பமாகவும் வெளிப்படுத்தியுள்ளது சிறப்புக்குரியது.உண்மையாகநடந்து வருவதைகாட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ஆவணப்படமாக பார்க்குமளவிற்கு உயர்ந்திருக்கிறது. பார்வையாளர்களின் மனவெளியில் ஊடுருவிச்செல்லும் படக்காட்சிகள் எவ்விடத்திலும் தொய்வடையவில்லை என்றே சொல்லலாம்.கதை நகர்வு பார்வையாளர்களை ஒன்றவைக்கவும் விலகி நின்று யோசிக்கவும் வைத்துள்ளது.கதை நிகழும் களம்-காலம் நகர்வு கொண்டதாக விளங்குகிறது.வண்டல் மண்சார்ந்த களத்தில் தொடங்கி கரிசல் நிலக் கருவேலமரங்களை அப்புறப்படுத்த உழைப்பதும் நெய்தல்நில கடல்பரப்பில் தொழில்செய்வதும் நகரங்களில் சிப்பந்தித் தொழில் செய்வதும் சிறார்கள் கடல் நீரில் விளையாடுவதும் வறண்ட நிலபரப்பில் விளையாடுவதும் பாலீத்தின் பைகளை பலூனாக விளையாடும் குழந்தைகளின் கள்ளம் கபடமற்ற  மனசினைப் பதிவுசெய்துள்ளார் இயக்குநர்.
     அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அரசு கடைக்கோடி மக்களின் வறுமை,அடிமைத்தொழில் இவைகளை மாற்ற அக்கறை காட்டுவதில்லை.விண்வெளிக்கு செயற்கைக்கோள் ஏவப்படுவதும் அணுஆய்த ஏவுகணைப் பரிசோதனை நடத்துவதும் யாருக்கான வளர்ச்சியைக் காட்டுகிறது எனும் கேள்வி எழுகிறது.நவீனத் தொழில்நுட்பம் - நவீன வர்த்தகப்பெருக்கத்தால் விலை ஏற்றம்-வருவாயின்றி வாழப்பழகிக்கொள்ளல்-பள்ளிக்கட்டணம் அதிகமாதல்-மருத்துவச் செலவை சமாளிக்க முடியாமல் போதல் - உலகமய முதலாளித்துவப் பிடியிலிருந்து தப்பிக்கமுடியாமல் சிக்கித்தவிக்கும் மக்களின் வாழ்வாதாரம் மிகவும் மோசமாகிவருகின்றன.ஒவ்வொரு நாளும் வாழ்வினை நகர்த்துவது என்பது பிரச்சினைக்குரியதாக இருந்தாலும் எல்லோரின் கைகளிலும் செல்பேசி வைத்திருப்பது உலக நடப்பினைக் காட்டுகிறது. இச்சூழலில் தான் தொடர்ந்து அரசியல்,பொருளாதாரப் பிரச்சினைகளை மூடிமறைப்பதாக காட்சி ஊடகம் செய்துவருகிறது.காட்சிஊடகம் அதன்வழி காட்டப்படும் காட்சிகள் வாழ்க்கையின் பல்வேறு நெருக்கடிகளையும்இபிரச்சினைகளையும் மறைத்து அதிகாரமையத்தைத் துதிபாடும்பாடுகின்றன. இந்த சினிமாக்களுக்கு மத்தியில் எதார்த்ததனமான மக்களின் உரையாடல் அறத்தில் வெளிப்பட்டுள்ளது.
     படத்தின் தொடக்கம் இந்தியாவில் ஏவப்படும் செயற்கைக்கோள் குறித்து மக்களின் கருத்துக்களைத் தொலைக்காட்சி ஊடகம் கருத்துக்கணிப்பு கேட்பது போல படம் தொடங்குகிறது.’இதைப்பற்றி ஒன்றும் தெரியாது’.’உலக நாடுகளில் இந்தியா வல்லரசு ஆகணும்.’ ‘எங்களுக்குத் தெரிந்ததெல்லாம் (மது பாட்டிலைக்காட்டி)இது தாங்க’ என்று கூறுவதும்; போலியோ சொட்டுமருந்து கொடுக்கவந்த செவிலியர் செயற்கைக்கோள் பற்றிக் கேட்கும் போது ‘வேலை வெட்டிக்குப் போகமாட்டோம்.ஊரே சந்தோசமா சுவீட் கொடுப்போம். இது நம்ம பெருமைதாங்க’என்று தன்ஷிகாவின் அம்மா பதில் சொல்வது படத்தின் தொடக்கத்தோடு பார்க்கும்போது இருமை எதிர்வுத்தன்மை கொண்டதாக அமைந்துள்ளது.அறம் படம் முழுவதும் பல்வேறு இடங்களில் இருமை எதிர்வுத்தன்மையைப்பார்க்கமுடிகிறது.வானம்xபூமி,மேல்xகீழ்,நல்லதுx கெட்டது, நன்மைxதீமை,உழைக்கும் மக்கள் கருத்து xஅதிகாரவர்க்க கருத்து என்கிற பல்வேறு கோணங்களில் சமூக முரணியத்தைப்  படைப்பாக்கப்பட்டுள்ளது.
      படத்தின் உரையாடல் கவிதைபோன்று அங்கதத்தன்மை கொண்டுள்ளது. அரசியலையும்,ஆட்சிப்பணியில் உள்ள அதிகாரிகளின் மெத்தனப் போக்கினையும் படத்தில் அங்கதப்படுத்தப்பட்டுள்ளது. இச்சூழலில் தனிமரமாக நின்று அதிகாரத்தைத் தம்மக்களுக்காக பெற்றுத்தரும் மாவட்டஆட்சியர் செயல்படுவதும் முழுமையாக மக்களுக்கு ஐனநாயத்தைப் பெறுவது என்பது ஆட்சிப்பணியில் இருந்து கொண்டு நிறைவேற்றுவது என்பது எட்டாக்கனி போன்றது என்று நினைத்து அதிலிருந்து வெளிவருவது மாவட்ட ஆட்சியர் மதிவதனி செய்தது மக்களுக்கான அதிகாரம்,ஐனநாயகம்,விடுதலையை வென்றெடுக்க இதுவல்ல வழி என்பதைக் காட்டுகிறது.எத்தனையோ மாவட்ட ஆட்சியாளர்கள் மக்களுக்காக வேலை செய்தால் அவர்களை அதிகாரத்துஸ்பிரயோகம் செய்தார்கள் என இடமாற்றம் செய்வதும் பணிப்பொறுப்பில்லா ஆட்சியராகக் காத்திருக்கச் செய்வதும் தமிழகத்தில் பார்க்கமுடிகிறது.ஒடுக்கப்பட்ட மக்கள் படித்து பலதடைகளை மாற்றி அரசு ஆட்சிப்பணியில் அமர்ந்தாலும் பூடகமாக ஒடுக்கப்படுவதும் அரங்கேறி வருகிறது.பெண் என்பதாலும் கூடுதலாகத் தடை உருவாகின்றது. ஆணாதிக்க மனோபாவத்தைக் கட்டவிழ்ப்பதைக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது..அறம் படத்தில் வரும் மதிவதனி மாவட்ட ஆட்சியர் என்பதாலும்,ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களுக்கு ஐனநாயம் பெற்றுத் தர வேண்டும் என்றும் மக்கள் தான் அரசு,அவர்கள்  அரசியல் அதிகாரம் பெறவேண்டும் என்கிற சிந்தனையாலும் எனக்குள் இப்படத்தினைப் பார்க்கும் போது மாவட்ட ஆட்சியராக இருந்து மக்களுக்குப் பணிசெய்வதற்காக மாவட்ட ஆட்சியர் பதவியைத் தூக்கி எறிந்த சிவகாமி அம்மா அவர்களை மனவெளிக்குள் கொண்டுவந்தது.
     செய்தியைப்பெறுவதும் தரவுகளைச் சேகரிப்பதிலும் செய்திஊடகங்கள் போட்டி போடுவது போன்று காட்சிப்படுத்துவதோடு மக்கள் தரப்பு நியாயங்களையும் செய்திஊடகம் வெளியிடுகின்றதைக் காட்சிவழி அறியலாம். அதிகாரம்படைத்தவர்கள் செய்தியாளர்களைத்தடுப்பதும் தாக்குவதுமான எதார்த்தத்தன்மையையும் படத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.பிரச்சினையை மாற்றுவதற்கு மக்கள் போராட முன்வரும் போது அதிகாரவர்க்கம் மக்கள் மீது வன்முறையை ஏவுவதும் படத்தில் பார்க்கமுடிகிறது.
     படம் மூன்று அடுக்குகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.மாவட்ட ஆட்சியர் மதிவதனியுடனான விசாரணை,ஆழ்குழிக்கிணறில் விழுந்த குழந்தையை மீட்பது,செய்தி ஊடகத்தின் காட்சி என்கிற தன்மைகளில் அறம் படம் அமைந்துள்ளது.தண்ணீர் பிரச்சினையை மையப்படுத்திப்படத்தின் போக்கு அமைந்தாலும் மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினை,விளம்பரப்படுத்துவதில் மட்டுமே  அரசுகாட்டும் முனைப்பு,பதாகைக் காலாச்சாரம் இவைகளைக் காட்சிவழி அங்கதப்படுத்தப்பட்டுள்ளன. இப்படத்தில் குழந்தை தன்ஷிகாவை அவளது தாய் இரு தருணத்தில் தேடுவாள்.ஒன்று இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் இல்லாமல் காய்ந்த சருகுகள் கொண்ட காட்டுப்பகுதியில் நின்றுகொண்டிருக்கும் போது சற்றுநேரத்தில் குழந்தைக் காணாமல் தேடும்பொழுது பாம்பினைப் பார்த்து அக்குழந்தை பயமறியாது எதிர்ப்பதுபோல் நிற்பது அக்குழந்தையின் தைரியத்தைக்காட்டுகிறது.மேலும் பின்னோக்கு உத்தியாகப் பொருத்திப்பார்க்கூடியதாக வகையில் அமைந்துள்ளது.  அங்கு காட்டப்படும் பாம்பு குறியீடாகப் பயன்படுத்தியுள்ளார் இயக்குநர்.தன் குழந்தையை காணவில்லை என்று தாய் தேடும்போது பாம்புப் புற்றினைப் பார்ப்பதும் பாம்புச்சாட்டையைப் பார்த்து மிறழ்வதும் திரைப்படத்தைப் பார்க்கும் பார்வையாளர்களையும் பயத்தின் விளிம்பில்ஆழ்த்துகிறது.பாம்புச்சாட்டை என்பதும்குறியீடாகும்.பாம்பு,பாம்புச் சாட்டை இவைகள் அதிகார விசமத்தனத்தின் குறியீடாக படத்தில் காட்சிப் படுத்தப்பட்டுள்ளதை அவதானிக்கமுடிகிறது.
     அதிகாரத்தில் உள்ளவர்கள் ஆழ்குழாய்க்கிணறு அமைத்து பூமிக்கடியிலுள்ள நீர்நிலைகளனைத்தையும் சுரண்டுகிறார்கள். வணிகநோக்கோடு நிலத்தடி நீரினை எடுத்து விற்பனைப் பண்டமாக ஆக்கப்படுவதால் மக்கள் விவசாயம் செய்வதற்கும்,குடிப்பதற்குக்கூட தண்ணீரின்றித் தவிக்கிறார்கள்.பொதுமையாகக் கிடைக்கின்ற தண்ணீரை அறிவுசார்ந்த சொத்துடமையாக ஆக்கப்படுவதால் ஒருபுறம் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுகின்றது.மறுபுறம் தண்ணீர் சந்தைப்பொருளாக ஆக்கப்பட்டுவருகிறது.தண்ணீர் சார்ந்த இருவேறு கருத்துநிலைகளை படத்தில் விவாதிக்கப்படுவதைப் பார்க்கமுடிகிறது.தாகம் எடுத்துச்சாகும் நிலை இனிவரக்கூடும் என்பதை அழுத்தமாகப்பதிவுசெய்துள்ள சூழலில் ஆழ்குழாய்க் கிணறு ஏற்படுத்தி தண்ணீரைச் சுரண்டுவதை பன்னாட்டு நிறுவனம் செய்வதும் அதற்கு ஆட்சியதிகாரத்தில் உள்ளவர்கள் துணைநிற்பதை வெளிப்படுத்த மேலும் அழுத்தம் கொடுத்திருக்கலாம் போலும்.இப்படத்தில் வானத்திற்கும் பூமிக்குமான இடைவெளியை உய்த்துணர்ந்திருப்பது வெளிப்பட்டுள்ளது. இந்தியாவின் இருவேறு முகங்களைத் தோலுரித்துக்காட்டுகிறது அறம்.விண்ணில் ஏவப்படுவது வளர்ச்சி சார்ந்தது.இதற்குத் துணைபோகும் வல்லுநர்கள் பெருமைக்குரியவர்கள் போற்றக்கூடியவர்கள்.அதே நேரத்தில் பூமிக்கு அடியில் அதலபாதாளத்தில் விழுந்து சாவின் பிடியில் தவிக்கும் குழந்தையை மீட்கப் போராடும் மாவட்ட ஆட்சியாளர் விசாரணைக்குரியராகவும்,கண்டனத்திற்குரியவராகப் பார்க்கும் முரண்பாட்டினை நுண்மையாக வெளிப்படுத்தியுள்ளார்.ஆழ்குழியில் விழுந்து இறப்பவர்களைக் காப்பாற்ற எந்தக் கருவியும் கண்டுபிடிக்கப்படவில்லை.சாமானிய மக்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கான தீர்வு தன்னெழுச்சியாகத் தான் ஏற்படும் என்பதைப் படத்தில் பார்க்கமுடிகிறது.
     அறியாமல் தவறிவிழுந்த குழந்தையைக்காப்hற்றப்படுவது சொற்பமாவே நிகழ்கிறது.முந்நூறுக்கும் மேற்பட்ட குழந்தைகள் ஆழ்குழியில் விழுந்து இறந்தது குழந்தையின் கவனக்குறைவல்ல.இது அரசின் கவனக் குறைவே காரணம் என படத்தில்  முன்மொழிந்தது சிறப்பிற்குரியது. படத்தின் முழுவதும் ஜிப்ரானின் இசை வலி நிறைந்ததாக உள்ளது.சுந்தரையரின் பின்னணிப் பாடல் படத்திற்கு வலுச்சேர்ப்பதோடு இலக்கியங்கள் காட்டும் அறத்தை நாம் மறந்துவிட்டோம் என்பதைக் காட்டுகிறது.மக்களும் அரசும் அறம் சார்ந்து வாழவேண்டும் என்பதை உரக்கச் சொல்கிறது அறம்.தொடர்ந்து மக்களுக்கான மாற்றுசினிமாவை கோபி நயினார் தரவேண்டுமென வாழ்த்துகிறேன்.

நன்றி : புதிய கோடாங்கி இதழ்
              

No comments:

Post a Comment