மரபும் நவீனமும்: நிகழ்த்துக்கலைக்கூறுகளில் மீளமைக்கப்படவேண்டியவைகள்
ம.கருணாநிதி ,
முன்னுரை
கலை இலக்கியங்கள் யாவும் சமூகத்தின் வெளிப்பாட்டுக் கருவியாகும். கலை இலக்கிய உருவாக்கத்திற்கும் சமூக உருவாக்கத்திற்கும் நேரடித் தொடர்புண்டு. கலை இலக்கியங்களின் உருவம், உள்ளடக்கம், உத்தி ஆகியன சமூக நிர்ப்பந்தங்களாலும் காலத்தின் உந்துதல்களாலும் மாற்றத்திற்குள்ளாகி வருகின்றன. சிறுகதை, நாவல், நாடகம், ஓவியம், சிற்பம் இவைகளின் தொடக்கப் புள்ளியிலிருந்து தற்காலம் வரைக்கும் பன்முகத்தன்மைகளில் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. சங்க இலக்கியப் பாடுபொருளுக்கும் நீதிநெறி, பக்தி நெறி இலக்கிய வெளிப்பாட்டிற்கும் அவ்வவ்காலச் சமூகச் சூழலின் பொருட்டு பலமாற்றம் நிகழ்ந்துள்ளதை அறியமுடிகின்றது. களப்பிரர்கள் வருகையை ஒட்டி நிகழ்ந்த தமிழ் இலக்கியத்தில் ஏற்பட்ட மாற்றங்களைப் போல ஐரோப்பியர் வருகையால் இந்திய-தமிழ் இலக்கியத் தளங்களிலும் அரசியல்-பொருளாதார-பண்பாட்டுத் தளங்களிலும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அந்தவகையில் இந்திய-தமிழ்ச் சமூகத்தில் நவீனவாதம் எனும் சிந்தனை முறை உருவாக்கம் பெற்றது எனலாம். நவீனவாதச் சிந்தனை இலக்கிய வகைகளிலும் பரவலாக்கம் பெற்றது.
நவீனவாத உருவாக்கமும் அதன் சமூகமும்
பதின்மூன்றாம் நூற்றாண்டில் தொலை நோக்குக் கண்ணாடி கண்டுபிடிக்கப்பட்டது. அதையடுத்து படிப்படியாக அறிவியல் சார் கண்டுபிடிப்பு, கடிகாரம், தொலைபேசி, தொலைக்காட்சி ஆகியன கண்டு பிடிக்கப்படுகின்றன. இருப்பு, எஃகு தொழிற்சாலைகள் உருவாக்கம் பெறுகின்றன. இவ்வாறான படிநிலை வளர்ச்சி சார்ந்த கண்டுபிடிப்புகளின் சூழலில் தொழில் நுட்ப வளாச்சியும் தகவல் தொடர்பு வளர்ச்சியும் பெருகத் தொடங்குகின்றன. முந்தைய சமூக அமைப்பான நிலப்பிரபுத்துவ சமூகக் கண்டுபிடிப்புகள் மாற்றம் பெற்று முதலாளித்துவ சமூக உருவாக்கம் பெறுகின்றது. இதன் விளைவால் தொழில் புரட்சி வேகம் பெறுகின்றது. மனித உறவு நிலைகளிலும், கலை இலக்கியங்களிலும் தொழில் புரட்சியின் விளைவுகளைக் காணமுடிந்தது.
“கடவுளர்கள் மீதும் சக மனிதர்களின் மீதும், தன்னின் மீதும் நம்பிக்கை இழந்திருக்கின்ற சமூகத்தில் தனக்கான முகங்களை இழந்து தனக்கான குறியீட்டு அடையாளத்தைத் தேடும் முயற்சியில் தொய்ந்து போயிருக்கிற அகமன உளைச்சல்களில் சிதைந்து அனைத்தையும் சிதைத்துச் சிதைத்தே பார்த்துப் பழகியிருக்கிற தங்களின் படைப்புகளின் மூலம் தங்கள் இருப்புகளை நியாயப்படுத்துகிற எழுத்துக்கள் நவீன மனநிலையின் வெளிப்பாடாய் எழுந்த நவீன எழுத்தாகும். இது முதலாளித்துவத்தின் உச்சம் தந்திருக்கும் பரிசு”1 என்கிற கருத்தின் மூலம்
நவீன எழுத்து உருவாக்கத்திற்கு முதலாளித்துவச் சூழலே காரணகர்த்தாவாக விளங்குகின்றதை அறிய முடிகின்றது. தனிமனிதத்துவம், நகர உருவாக்கம், நடுத்தர மக்கள் உருவாக்கம், இயந்திர உருவாக்கத்தினூடாக மனித மனநிலை அந்நியமாதல், வாழ்வினை அபத்தமாகக் காணுதல், உலகப் போர்களினால் ஏற்பட்ட பேரழிவு, மதம், கடவுள் குறித்தான கருத்தாக்கங்களின் மீது ஏற்பட்ட அவநம்பிக்கை, மனிதமனம் அனைத்தையும் சூன்யமாக சிதைவுண்டதாகவே அணுகியது. இத்தகைய மனித அடையாளங்களின் மையத்தைத்தேடும் பொருட்டு இலக்கியத்தின் குவிமையம் நவீனமாக நவீனத்துவம் உருப்பெற்றது.இப்பின்னணியில் நவீனத்துவம் சிதைவுற்ற மனங்களின் விடுதலை நோக்கிய பயணமாக,கலை இலக்கியங்களில் செயல்பட்டது.
மேற்கத்திய நாடக வடிவம் இந்திய – தமிழ் நாடக மரபில்கலந்த படச்சட்டக நாடக மேடை (Pசழளஉநnரைஅ வுhநயவசந) அமைப்பினைப் பார்க்க முடிகின்றது. படச்சட்டக அரங்க அமைப்பானது பார்வையாளர்களை இருளுக்குள் அமர வைத்து ஒவ்வொருவரையும் தனித்தனியாக அந்நிய மனோபாவத்தில் அமர வைக்கும் தன்மையைக் கொண்டதாகும். பாரம்பரிய நிகழ்த்துமரபு இவ்வமைப்பு முறையிலிருந்து வேறுபட்டதாக விளங்குகின்றது. இப்பாரம்பரிய நிகழ்த்துக்கலை சமூகத்தின் அனைத்து மட்டத்தினரும் கட்டுமான நிலையில் குழுவாய் ஒன்றுகூடி அமர்ந்து, நிகழ்த்துநர் - பார்வையாளர் எனும் பேதமின்றி கூட்டு நடவடிக்கை சார்ந்த நிகழ்வாய் வெளிப்படக் கூடியதாகும். ஆனால், படச்சட்டக நாடக மேடை உருவாக்கம் தனிமனிதன் சார்ந்த பின்புலத்தில் நகர் சார்ந்த மேடையாக விளங்குகின்றது.ஐரோப்பிய நாடக ஆசிரியர்களின் மூலமாகவும், பார்ஸி நாடகக் கம்பெனி மூலமாகவும் படச்சட்டக அரங்கஅமைப்பு உருவானது என்பதை அறியலாம். வண்ணவண்ண திரைச்சீலைகளும்பிரமாண்டமான காட்சியமைப்புகளினூடாக நாடகம் நிகழ்த்தும் மரபு நகரங்களில் அறிமுகமாயின.
பாரம்பரிய நிகழ்த்துக்கலைக் கூறுகளின் தேவையும் நோக்கமும்
பாரம்பரிய நிகழ்த்துக்கூறுகளின் தேவையையும் நோக்கத்தையும் சங்கீத் நாடக அகாடமி உணர்ந்து, 1971இல் இந்திய அரங்கு எனும் பொருளில் ஒரு மாநாட்டினை ஏற்பாடு செய்தது. நவீன நாடகங்களில் பாரம்பரிய, நாட்டுப்புற நிகழ்த்துக் கலைகளையும், பாரம்பரிய அரங்கக்கூறுகளையும் இணைப்பது என்பதே இம்மாநாட்டின் மையப்பொருளாக விவாதிக்கப்பட்டது. பாரம்பரியம் அல்லது மரபு என்றால் என்ன? மரபில் என்னென்ன இருக்கிறது? மரபான நிகழ்த்துக்கூறுகளை நவீன நாடகங்களில் ஏன் பயன்படுத்த வேண்டும்? மரபினைக் கையாள்வதால் என்ன பயன்? எனும் வினாக்களின் அடிப்படையில் இம்மாநாட்டின் விவாதப் பொருள் அமைந்தது. இம்மாநாட்டில் கிரிஸ் கார்னட், விஜய் டெண்டுல்கர், பாதல் சர்க்கார், ஜி.சங்கரப்பிள்ளை முதலியவர்கள் மரபின் முக்கியத்துவத்தைத் தெளிவுபடுத்தி நவீன அரங்கில் மரபுகளை இணைக்கும் தன்மையை சங்கீத் நாடக அகாடமிக்கு பரிந்துரை செய்தார்கள். சங்கீத் நாடக அகாடமியும் இப்பரிந்துரையை ஏற்றுக்கொண்டு நவீன நாடகங்களில் பாரம்பரிய அரங்கக்கூறுகளையும் இணைத்து இந்தியாவிலுள்ள மொழிவாரியான நாடகக்குழுக்களுக்கு நாடகம் தயாரிக்க அழைப்பு விடுத்தது. இதன் அடிப்படையில் ‘இளம் இயக்குநர் ஊக்குவிப்புத் திட்டம்’ எனும் திட்டத்தின்மூலமாக நிதி உதவியும் செய்து நாடகம் தயாரிக்க வேண்டுகோள் விடுத்தது. இத்திட்டத்தின் மூலமாகவே நவீனநாடக இயக்குநர்களுக்கு மரபினைப் பயன்படுத்தி நவீனநாடகம் உருவாக்க வேண்டுமென்கிற எண்ணம் உருவாகியுள்ளது.
தெருக்கூத்து, தேவராட்டம், பாவைக்கூத்து, குதிரை ஆட்டம், காவடி ஆட்டம், பறையாட்டம் முதலிய நாட்டுப்புற நிகழத்துக்கலைகளை இணைத்து நாடகங்கள் உருவாக்கும் நோக்கோடு ‘1984இல் மைய சங்கீத் நாடக அகாடமி செயல்படுத்தத் தொடங்கிய இளம் இயக்குநர்களை ஊக்குவிக்கும் நாடக நிதி உதவித்திட்டம்’. இத்திட்டத்தின் வாயிலாக மாநிலங்கள் வாரியாக நாட்டுப்புற நிகழ்த்து வடிவத்தை இணைத்து நவீன நாடக உருவாக்கம் ஏற்பட்டது.இந்நிலையில் மொழிவாரியான தேசிய இன எழுச்சியும் பண்பாட்டு அடையாளங்களை நோக்கியப் பயணித்தல் என்பது இந்தியாவின் சுதந்திரத்திற்கு முன்னும் பின்னும் காலனிய ஆதிக்க வேர்களை அகற்றுவதற்கும் ஆதிக்கத்திற்கு எதிராக இயங்குவதற்குமான களங்களை பாரம்பரிய அரங்கிலிருந்து நவீன நாடகங்கள் பெற்றுள்ளதை அறியலாம். இச்சூழலில் மண் சார்ந்த அடையாளங்களைப் பேணுதல் எனும் குணநிலை சார்ந்த செயல்பாடு, கலை இலக்கியங்களின் அடிநாதமாக விளங்குகின்றது. சிறுகதை, நாவல்களில் சமூகத்தைப் பிரதிபலித்தல், பண்பாட்டு அடையாளங்களை மீட்டெடுத்தல் எனும் நிலை படைப்புகளில் வெளிப்பட்டன. இந்திய அரங்கிலும் மண்சார்ந்த அடையாளங்களை மீட்டெடுக்கும் சூழல் நவீன அரங்கில் மரபினை இணைத்தல் எனும் தன்மை உருவாகியுள்ளது.
நவீன சிந்தனை மரபால் கூட்டுச் செயல்பாடு, கூட்டு உணர்வு, கூட்டு நடவடிக்கை சார்ந்த மரபான அரங்க முன்னெடுப்புக்களிலிருந்து வேறுபட்டு, தனிநபர் சார்ந்த – தனி அடையாளங்களை முன்வைக்கும் வகையிலேயே நவீன அரங்கு உருவாகியுள்ளது. பாரம்பரிய அரங்கிலிருந்து நவீன அரங்கு பெற்றுக்கொண்டவை எவை? பாரம்பரிய அரங்கிலிருந்து எதை எடுத்துக்கொண்டோம்? எடுத்துக் கொண்டவைகளை எப்படி பயன்படுத்துகிறோம்? பாரம்பரிய அரங்கு எந்தெந்த சூழலில், எங்கெங்கு, எப்பொழுது நிகழ்த்தப்படுகிறது? பாரம்பரிய அரங்கில் நடிகர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் இருக்கக்கூடிய தொடர்பாடு யாது? பாரம்பரிய அரங்கிலிருந்து நவீன அரங்கிற்குத் தேவையானதை எவ்வாறு எடுத்துச் செல்லப்போகிறோம்? நவீன நாடகங்களில் பழமையான மரபுக்கூறுகளின் பயன்பாடுகள் என்று பார்க்கும்போது மேற்குறிப்பிட்டுள்ள வினாக்கள் ஆய்வில் எழுகின்றன. “மனிதனின் உடல் அசைவுகள், பாவனைகள், குரல் இவற்றின் அடிப்படையில் புதிய அரங்கை உருவாக்கும் முயற்சிக்கு மரபுக்கலைகளில் வாய்ப்பிருப்பதை உணர்ந்து இந்தியாவில் பல இடங்கிளல் புதிய அரங்கமுறைகள் உருவாக்கப்பட்டன. மேற்கு வங்காளத்தில் ஜாத்ரா, மகாராஷ்டிரத்தில் தமாஷா, கர்நாடகாவில் பயலாட்டா, கேரளத்தில் கூடியாட்டம், தெய்யம், படையணி, முடியேற்றம், தமிழகத்தில் தெருக்கூத்து, தேவராட்டம், ஒயிலாட்டம் போன்ற வடிவங்கள் உருவாக்குவதற்குப் பயன்படுகின்றன”2 இக்கருத்தின் மூலம், நாட்டுப்புறக் கலைவடிவங்களின் கூறுகளைக் கொண்ட நவீன நாடகத்தேடல் உருவாகி வருவதை அறியமுடிகிறது. நவீன நாடகங்களின் பாடுபொருள் எங்கிருந்துஎடுக்கப்பட்டாலும்அவை மண்சார்ந்த மரபுக்கூறுகளைக் கொண்டேதயாரிக்கப்பட்டுள்ளன. “உலகின் எந்த மூலையிலிருந்து நாடகப் பாடங்களை எடுக்கத் தயங்குவதில்லை. ஆனால், எதைச் செய்தாலும் எமக்குரிய மரபோடு வழங்கவே விரும்புகிறோம்”3 என்று இளைய பத்மநாதன் கூறுகிறார். இக்கருத்தின் மூலம் மரபின் தேவையை உணரமுடிகிறது.
நவீன நாடகங்களில் மரபை இணைத்தல்
தமிழ்ச்சூழலில் மரபான அரங்கு குறித்துப் பார்க்கும்போது அவை பன்முகத்தன்மை கொண்ட செயல்பாட்டின் அடிப்படையில் விரிவடைந்துள்ளது. மரபுசார் அரங்கின் கூறுகளை நவீன நாடகத்தோடு இணைக்கும் அக்கறை இளம் இயக்குநர் ஊக்குவிப்புத் திட்டத்தின் மூலமாகவே நிறைவேறியதை அறியமுடிகிறது. இதன்மூலம் தென்மண்டல நாடக விழாவினை நடத்தி அதன்வழி தேசிய நாடக விழாவிற்குத் தேர்வு செய்யப்பட்டு டெல்லியில் நாடகங்கள் நிகழ்த்தப்பட்டன. இத்திட்டம் கடந்த பத்தாண்டுகள் நடைமுறையில் இருந்தது. தற்போது கைவிடப்பட்டது. இருப்பினும் பாரம்பரிய கலையை நவீன நாடகங்களில் இணைக்கும் தன்மை எல்லாமொழி ரீதியான செயல்பாடாய் விளங்குகிறது.
•பார்வையாளருக்கும் நிகழ்த்துவோருக்கும் எந்த ஒரு இடைவெளியற்ற நெருக்கம்.
•பாத்திர வார்ப்பிற்கேற்பவும் தாளக்கட்டுகளுக்கு ஏற்பவும் உடலசைவு பாடல்களின் மூலமாகவும் காட்சிவெளியில் பயணம் செய்ய வைக்கும் காவியச்சாயல்.
•பார்வையாளர்களை காட்சியோடும் நாடக நிகழ்வோடும் உணர்வுப்பூர்வமாக ஒன்றவைத்தலும் அறிவுப்பூர்வமாக விலக வைத்தலும்.
இவ்வாறான மரபான நாடகங்களில் இருக்கும் நாடகக்கூறுகளைக் கொண்டு இயங்க வேண்டிய தேவை எழுந்துள்ளன. ஒவ்வொரு காலகட்டத்தின் சமூக நடவடிக்கைகளின் பின்புலத்தில் மரபுடனும் வரலாற்றுடனும் ஓர் உரையாடல் நிகழ்த்துவதாய் நவீன எழுத்துக்கள் செயல்படுகின்றன. நவீன எழுத்தென்பது பரிசோதனை முயற்சி கொண்டதாகும். மனித வாழ்க்கையினூடாகவும் சரித்திரத்தினூடாகவும், சமூக இயக்கத்தினூடாகவும் வாழ்வியல் குறித்தான பரிசீலனையின் அடிப்படையில் நவீன யுகத்தினை கலை இலக்கியங்களில் பிரதிபலிப்பதற்கான தேவையிருப்பதன் பொருட்டு மரபான நாடகக்கூறுகளை ஏற்பதும், சிலவற்றை மறுப்பதும் நவீன நிகழ்த்துக்கலைகளின் குணநிலையாகும்.
மரபு சார்ந்த நிகழ்த்துநர்களுக்கும் நாடகப் பார்வையாளர்களாகிய மக்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவே மக்கள் உணர்கின்றனர். இத்தொடர்பு என்பது சடங்கு சார்ந்த திருவிழாக்களின் மூலமாக வருடந்தோறும் கூட்டுறவு நீடிக்கின்றது. வடஆர்க்காடு, தென்னார்க்காடு ஆகிய வட்டாரங்களில் நிகழ்த்தப்படும் தெருக்கூத்து நிகழ்வுகள், மதுரை மாவட்டம் சார்ந்து நிகழ்த்தப்படும் நாட்டுப்புற நாடகங்கள் மற்றும் நாட்டுப்புற நிகழ்த்துக் கலையாகிய தேவராட்டம், இராஜாராணி ஆட்டம், தென்மாவட்டங்களில் நிகழ்த்தப்படும் கணியான்கூத்து முதலிய கூத்துக்கள் கொங்கு வட்டாரம் சார்ந்த கூத்து வகைகள் எனும் இவ்வாறான மரபான நிகழ்விப்புகளின் மூலமாக மக்களுக்கும் கூத்து நாடகக் கலைஞர்களுக்கும் நெருக்கமான பிணைப்பு இருக்கும். இவ்வாறான பரிவர்த்தனையினூடாக மரபான நிகழ்த்துக்ளகூறுகளினூடாகவும் நவீன நாடக இலக்கியங்கள் - நவீனநாடக நிகழ்வுகள் சமூகமாற்றத்திற்கான மக்களின் விழிப்புணர்வு சார்ந்த மாற்று அரங்காக (யுடவநசயெவiஎந வாநயவசந) உருவாக வேண்டும்.
•பார்வையாளர்கள் எந்த விதிக்கட்டுப்பாடுகளின்றி மரபு நாடகங்கள் இயங்கும் தன்மை.
•பாத்திரங்கள் பல பாத்திரங்களாக ஆதல்.
•கட்டியங்காரன், பபூன் பாத்திரம் நாடகக்கதையின் பெயர் நோக்கம் நாடகத்தின் மையம் போன்றவற்றை எடுத்துரைத்து நாடகத்தை நகர்த்திச் செல்லல்.
•நாடகம் பற்பல கிளைக்கதைகளை உள்ளடக்கியதாக விரிவடைதல்.
•நகைச்சுவை உணர்வு கலந்து மக்களின் வாழ்வியலை அலசி ஆராய்தல்.
•மரபு நாடகங்களில் நிகழ்த்துநர் - பார்வையாளர் எனும் பேதமின்மை
•கூத்து நாடகம் முப்பரிமாணங்களில் (வுhசநந னுiஅநளெழைn) விரிவடைதல்.-மரபில் இருக்கும் நிகழ்த்துக்கூறுகளை நவீனப்படுத்தும் முயற்சியும் நிகழ்ந்துவருகிறது.
பாரம்பரிய அரங்கு நிகழ்த்தப்படும் சூழல் - இடம் - ஆற்றுகையாளர் பார்வையாளர்களுக்குமான உறவுநிலை – வாழ்வியல் நிலை – வாழ்க்கை பற்றிய நம்பிக்கை உலகியல் பற்றிய பார்வை இவைகளிலிருந்து துண்டித்துக்கொண்டு வெளிப்படுவதாய் நவீன அரங்கினை அவதானிக்க முடியும். பாரம்பரிய அரங்கு நம்பிக்கை சார்ந்தும் பழமரபுத் தொன்மம் சார்ந்தும் ஓர் உரையாடலை நிகழ்த்தி வருகின்றது. உதாரணமாக, திரௌபதி, பாரம்பரிய அரங்கினில் திரௌபதி அம்மன் வழிபாட்டுச் சடங்கோடும் மக்களின் நம்பிக்கையோடும் தெய்வீகத் தன்மையில் வெளிப்படக்கூடியது. இதில் திரௌபதி துகில் உறிதல் திரௌபதி துகில் உறிவதற்கு முன்பாக கூத்தாடக்கூடியவர் தீபம் ஏற்றி வணங்கிவிட்டு பார்வையாளர்களிடம் மன்னிப்பு வேண்டிவிட்டு இக்கூத்தின் காட்சியை நிகழ்த்துவர். இதில் குற்றம் குறையிருப்பின் மன்னித்தருளுக எனச் சொல்லிவிட்டு கூத்தினைத் தொடர்ந்து நடத்துவார்கள். திரௌபதியின் துகில் உறியும் துச்சாதனன் கூட சபையினர்களிடம் மன்னிப்பு வேண்டியும் தெய்வத்திடமும் மன்னிப்பு வேண்டியும் இதனை நிகழ்த்துவர். ஆற்றுகையாளர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் இவ்வாறான பரிவர்த்தனை இருக்கும். ஆனால் நவீன அரங்கில் பார்த்தோமானால் திரௌபதியை, வெறும் பாத்திரமாக இயக்குநரின் சிந்தனைப்புலத்தில் உருவாக்கப்பட்ட அறிவுப்பூர்வமான பாத்திரமாக மட்டுமே பயன்படுத்தும் தன்மையை அவதானிக்கலாம். இங்கு திரௌபதி சார்ந்த நம்பிக்கை, தொன்ம உருவாக்கம் பார்வையாளர்களின் மனநிலை போன்றவைகள் மாற்றம் பெறுகின்றன. இங்கு பொது புத்திசார்ந்த செயல்பாடு, சடங்கு முதலியவை நீங்கி, நவீன அரங்கு பொதுமக்களுக்குஉரியதாக இல்லாமல் வெகுசிலருக்கானதாகவும் படித்த அறிவாளிக்கானதாகவும், தொடர் செயல்பாடற்றதாகவும், தனிநபரின் படைப்பாகவும் மாற்றம் பெறுகின்றது. திரௌபதி தொன்மத்தை நம்பிக்கையாக–சடங்காக-கூட்டுப்படைப்பாகப் பார்க்கும் விதத்திலிருந்து வேறுபட்டு காரணகாரியத்தோடு அறிவுப்பூர்வமாகப் பார்க்கும் தன்மையை நவீன அரங்கு உருவாக்கியுள்ளது. இவை, படச்சட்டக அரங்கிற்குத் தேவையான அரங்கக் கூறுகளையும் அரங்க மொழியினையும் கொண்டு விளங்குகின்றது. நவீன அரங்க மொழி பாரம்பரிய அரங்க மொழியினை நன்கு உட்செரித்து வெளிப்படும் நிலை குறைவாகவே உள்ளது. படச்சட்டக அரங்கிற்குத் தேவையான பாரம்பரிய அரங்கக்கூறுகளை எடுத்தல், நவீன அரங்க ஆற்றுகையாளர்களுக்கான உடல், குரல், பழகும்முறை எழுதப்பெற்ற அரங்கப் பிரதி எனக் கொண்டுள்ளது.
No comments:
Post a Comment